தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தின் மூலமாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நகர்வானது மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எனவும், இதுவொரு அரசியல் நாடகமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
.அவர் மேலும் கூறுகையில், தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் என்ற பெயரில் எமது மாவட்டத்தில் சில பாடசாலைகளை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள். உண்மையிலேயே இதனை இவ்வாறு செய்வதனை மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியாகவே எனது பார்வை உள்ளது.
ஆனால் எமது மாகாணத்தில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளன. தேசியப் பாடசாலைகள் பல இன்னும் போதுமான தேவைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ளது.
உதாரணத்திற்கு பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் 3000 மாணவர்கள் உள்ள போதும், அங்கு 250 பேர் இருக்கக் கூடிய கேட்போர் கூடமே உள்ளது.
கடந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கேட்ட போது நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறினர். ஆனால் இம்முறையாவது இவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு கேட்கின்றேன்.
தேசியப் பாடசாலைகள் என எடுத்திருப்பது அரசியல் நாடகமே ஆகும். 300 பாடசாலைகளில் 5 பாடசாலைகளை எடுத்து அபிவிருத்தி செய்ய முடியாது. இதனை விடுத்து மாகாண சபைகளுக்கு நிதியை ஒதுக்கினால் அதற்கான வேலைத்திட்டங்களை செய்யலாம்.
தேசியப் பாடசாலைகளாக 50 வருடங்களாக இருக்கும் பாடசாலைகளில் பல குறைபாடுகள் இருக்கும் போது, நீங்கள் அரசியல் நாடகத்திற்காக தேசியப் பாடசாலைகளை உருவாக்குதல் என்பதனை கைவிட்டு, அனைத்து பாடசாலைகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீட்டை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றார்.
இதன்போது பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாண பாடசாலைகள் மற்றும் சகல பாடசாலைகளும் மாகாண நிர்வாகத்தின் கீழே இயங்குகின்றன. அதற்கான நிதி மாகாண சபையின் ஊடாகவே ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஆயிரம் தேசியப் பாடசாலைகள் முன்மொழிவுக்கமைய நாங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இது அரசியல் நாடகமல்ல. மாகாண பாடசாலைகளை தெரிவு செய்து தேசியப் பாடசாலைகளாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான நிதி மத்திய அரசின் ஊடாக ஒதுக்கப்படுகின்றது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவில் கல்விக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment