துனீஷிய தொலைக்காட்சி ஒன்றில் சர்வாதிகாரத்திற்கு எதிரான கவிதை ஒன்று பாடப்பட்டதால் அந்தத் தொலைக்காட்சி சேவையை நிர்வாகத்தினர் மூடியுள்ளனர்.
செய்தூனா டீவி என்ற அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஒருவரான ஆமர் அயத் அந்தக் கவிதையை பாடிய நிலையில், நாட்டின் பாதுகாப்பை குறைமதிப்புக்கு உற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி நாட்டின் முழு அதிகாரத்தையும் தனக்குக் கீழ் கொண்டு வந்த ஜனாதிபதி கயிஸ் சயித் மீது செய்தூனா தொலைக்காட்சி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் இந்தத் தொலைக்காட்சி சேவை சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டு வந்திருப்பதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அயத் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நிகழ்ச்சியின்போது ஈராக்கிய கவிஞர் அஹமது மடாரின் கவிதை ஒன்றை படித்தார். மடாரின் அரபு உலகின் சர்வாதிகாரிகள் பற்றிய கவிதைகள் மற்றும் நையாண்டிகள் புகழ்பெற்றவையாகும்.
இந்த கவிதை பாடப்பட்ட விரைவிலேயே அயத் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதன் தொடர்ச்சியாகவே அயத்தின் கைதும் உள்ளது.
No comments:
Post a Comment