எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிடின் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரிக்கிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிடின் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரிக்கிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இராஜதுரை ஹஷான்

ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையினால் ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டமடையும். எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இம்மாதத்திற்குள் விலை அதிகரிக்கப்படாவிடின் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமும், அரசாங்கத்திடமும் அனுமதி கோர வேண்டிய அவசியம் கிடையாது. கனிய வளம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனையினால் 20 ரூபாவும், ஒரு லீட்டர் டீசல் விற்பனையினால் 40 ரூபாவும் தாம் நட்டமடைவதாக ஐ.ஓ.சி நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். இருப்பினும் தற்போது 5 ருபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள நட்டத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்வார்கள் என்று கருத முடியவில்லை. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கட்டம் கட்டமாக எரிபொருள் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையினால் ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டமடையும். நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் அந்நிறுவனம் 10 சதவீத பங்கினை வகிக்கிறது.

எரிபொருளின் விலை கடந்த ஜுலை மாதம் இறுதியாக அதிகரிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் விலை அதிகரிக்கப்படவில்லை. விலை அதிகரிக்காமல் எரிபொருளை விநியோகிப்பதால் ஒரு லீட்டர் டீசல் விற்பனையினால் 37 ரூபா நட்டத்தையும், ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனையினால் 23 ரூபா நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளோம். இந்நிலையை தொடர்ந்து நீடிக்க முடியாது. எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இம்மாதம் முதலாம் திகதி சக்தி வலுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினோம்.

அவ்வேளையில் உலக சந்தையில் ஒரு பெற்றோல் தாங்கியின் விலை 85 டொலராகவும், டீசல் தாங்கியின் விலை 88 டொலராகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது பெற்றோல் தாங்கியின் விலை 99 டொலராகவும், டீசல் தாங்கியின் விலை 97 டொலராகவும் அதிகரித்துள்ளன. ஆகவே இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகிறது. அரசாங்கம் திறைச்சேரி ஊடாக நிதி ஒதுக்க வேண்டும் அல்லது விலை அதிகரிக்க வேண்டும். இத் தீர்மானங்களை எடுக்கா விட்டால் கூட்டுத்தாபனம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும். ஆகவே வெகுவிரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment