கொழும்புத் துறைமுக பகுதியை அதானி குழுமத்திற்கு வழங்கியிருப்பது நாட்டிற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் : ரஞ்சன் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் பொது மன்னிப்பு கிடைத்திருக்கும் - ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

கொழும்புத் துறைமுக பகுதியை அதானி குழுமத்திற்கு வழங்கியிருப்பது நாட்டிற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் : ரஞ்சன் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் பொது மன்னிப்பு கிடைத்திருக்கும் - ஹெக்டர் அப்புஹாமி

நா.தனுஜா

'இந்தியாவின் அரசாங்கம்' என்று கருதப்படக் கூடிய அதானி குழுமத்திடம் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் வழங்கப்பட்டிருக்கின்றது. உலகிலேயே பெருமளவு இலாபத்தைத் தரக்கூடிய மீள் ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா வெகுவாக அவதானம் செலுத்தி வருகின்ற சூழ்நிலையில், மிக முக்கிய வாணிப கேந்திர நிலையமாக இருக்கின்ற கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதியை அதானி குழுமத்திற்கு வழங்கியிருப்பது நாட்டிற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் எமது சகாவான ரஞ்சன் ராமநாயக்கவை அங்குனுகொலபெலஸ சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டோம். அவர் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் தற்போது அவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவர் எமது கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதனால் அந்த வாய்ப்பை இழந்திருக்கின்றார்.

எனவே அவர் இப்போது ஓர் 'அரசியல் கைதியாக' மாறியிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஏனையவர்களைப் போன்று ரஞ்சன் ராமநாயக்கவையும் சமத்துவமாக நடாத்துமாறும் அவரைப் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக எமது நாட்டைச் சேர்ந்த பாடகி யொஹானி ஒட்டு மொத்த உலக மக்களினதும் மனங்களைக் கவர்ந்திருக்கின்றார். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கூட்டத்தைப் பார்க்கும்போது, அவர் அனைவராலும் விரும்பப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறு யொஹானி தனது பாடலினால் இந்தியாவைக் கைப்பற்றும்போது, மறுபுறம் அதானி ஒப்பந்தம் மூலம் இலங்கையைக் கைப்பற்றியிருக்கின்றார்கள்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த காலத்தில் வெகுவாகப் பேசப்பட்டதுடன் இந்தியாவின் அதானி குழுமம் அதனைப் பெற்றுக் கொள்வதில் அதிக நாட்டத்தைக் காண்பித்து வந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி, தொழிற்சங்கங்கள், பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக கிழக்கு முனையம் காப்பாற்றப்பட்டாலும் மேற்கு முனையம் அதானி குழுமத்தின் வசமாகியிருக்கின்றது.

கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 'இந்தியாவின் அரசாங்கம்' என்று கூறக்கூடிய அதானி குழுமத்திற்கு மற்றொரு பகுதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் துறைமுகங்களின் ஊடாக மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றன.

இது உலகளாவிய ரீதியில் பெருமளவு இலாபத்தை ஈட்டித்தரக் கூடிய வணிக செயற்பாடாகும். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. கொழும்புத் துறைமுகம் என்பது அதிக வருமானம் உழைப்பதற்கு வழிவகுக்கக் கூடிய வணிக ரீதியிலான முக்கிய கேந்திர நிலையமாக விளங்குகின்றது.

மறுபுறம் நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாத் தாக்குதல் நடைபெறக் கூடும் என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது. நான்கு தேவாலயங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என்று கடற்படையினர் அந்தந்த தேவாலயங்களுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் அது தவறுதலாக இடம்பெற்றதெனக் கூறி மன்னிப்புக் கோரப்பட்டது. இத்தகைய ஒத்திகை நிகழ்வுகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சூத்திரதாரிகளை அரசாங்கம் வெகுவிரைவில் வெளிப்படுத்த வேண்டும். அன்றேல் அரசாங்கம் ஒருபோதும் மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்.

அதுமாத்திரமன்றி நாமும் அமைதியாக இருக்க மாட்டோம். மாறாக சூத்திரதாரிகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் எமது உயிர்களைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment