நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியிலுமுள்ள 312 கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக நிலவி வரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 87 நாட்களாக தொடர்கிறது. எனினும் அரசாங்கம் இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் அதனை நாம் நிராகரிக்கின்றோம்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை ஒரே தடவையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். 5000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை.

எனவேதான் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு கொழும்பு நகர சபை மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி, லிப்டன் சுற்று வட்டம் வரை தொடரவுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியிலுள்ள 312 கல்வி கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment