தீர்வை மறுத்த ஆசிரியர் அதிபர்கள், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர முடிவு : ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை வழங்கும் வரை போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

தீர்வை மறுத்த ஆசிரியர் அதிபர்கள், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர முடிவு : ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை வழங்கும் வரை போராட்டம்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இன்றையதினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் தொடர்ச்சியாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பளப் பிரச்சினை தொடர்பில், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நேற்றையதினம் (12) பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

சுமார் 3 1/2 மணி நேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற அமைச்சரவையில், அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, 3 கட்டங்களில் 3 வரவு செலவுத் திட்டங்களில் சம்பள உயர்வை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

ஆயினும் நேற்று (12) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பள அதிகரிப்பை 2 கட்டங்களில் அதாவது எதிர்வரும் ஜனவரியில் முதல் கட்டமாக அதன் 1/3 பங்கையும், அடுத்த வருடத்தில் (2023) இரண்டாம் கட்டமாக அதன் 2/3 பங்கினையும் அதனை வழங்க அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இது தொடர்பில் இன்றையதினம் (13) ஏனைய சங்கங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காது தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கையில், "நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒரு இணக்கப்பாட்டிற்கு முடிவடைந்தது நீங்கள் அறிவீர்கள். 

அதாவது 2018ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சம்பளம் அதிகரிப்பை, தற்போதைய அரசாங்கம் நான்கு கட்டமாக வழங்குவதாக முதலில் அறிவித்திருந்தார்கள் பின்பு மூன்று கட்டமாக அதனை வழங்க இணக்கம் தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் பேச்சுவார்த்தையில் அதனை இரண்டு தடவைகளாக, இரண்டு கட்டமாக அதாவது, அதன் மூன்றில் ஒரு பகுதியை எதிர்வரும் வரவு 2022 செலவுத் திட்டத்திலும், 2023 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அதன் எஞ்சிய 2/3 பங்கையும் இரண்டு தடவைகளில் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனவே இந்த இணக்கப்பாட்டுக்கு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கமாகிய நாங்கள் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்த வகையில் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்றையதினம் (13) இந்த போராட்டம் தொடர்பான பல விடயங்களை பேசி, இறுதியில் இந்த போராட்டம் வெற்றி பெறும் வரை ஓயப்போவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.

நிச்சயமாக இந்தப் போராட்டத்தை வெற்றியிலே முடிக்க வேண்டும். எமது கோரிக்கை நியாயமான கோரிக்கை. சுபோதினி அறிக்கையின் படி எமக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அச்சம்பள அதிகரிப்பு ஒரே தடவையில் பெற்றுக் கொள்வதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது. மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வை கண்டு, பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

எனவே இன்னும் ஏழு நாட்கள் அரசாங்கத்திற்கு உள்ளன. உடனடியாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு சாதகமான பதிலை தந்து இந்த மாணவர்களுடைய கல்வியை பாதுகாப்பதற்கான தேவை அரசாங்கத்திற்கு இருப்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தற்போது 94ஆவது நாளாகவும் இப்போராட்டத்தை தொடர்ந்து வந்துள்ளோம். எமது போராட்டத்திலிரந்து ஒரு துளி அளவேனும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. இப்போராட்டத்தில் அச்சாணியாக இருக்கும் அதிபர் ஆசிரியர்கள், தொடர்ந்தும் நீங்கள் போராட்டத்தில் இணைந்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment