பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைந்தால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் : அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதையும், வாபஸ் பெறுவதையுமே செய்கிறது - ​உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைந்தால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் : அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதையும், வாபஸ் பெறுவதையுமே செய்கிறது - ​உதயகுமார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இரசாயன உரத்துக்கு தடை விதித்ததால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவித்து ஒட்டு மொத்த பெந்தோட்ட மக்களையும் கம்பனிக்காரர்களின் அடக்குமுறைக்கு தள்ளி இருக்கின்றார்கள் என எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள் கீழ் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுப்பதற்காக என்ன முயற்சிகளை எடுத்தாலும் என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும் அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அத்தனை அதிகாரங்களை வைத்துக் கொண்டும் அரிசி ஆலை உரிமையாளர்களின் கால்களில் விழுந்து கேவலமடைந்திருக்கி்ன்றது.

இரவாேடு இரவாக நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய தெரிந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமான அரிசி, சீனி, பருப்பு போன்ற பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு தெரியாது.

அதேபோன்று இரசாயன உரத்தை தடை செய்ய தெரிந்த இவர்களுக்கு, விவசாயிகளுக்கு தங்களது விவசாய உற்பத்திகளுக்கு தேவையான மாற்று உரத்தை வழங்குவதற்கு தெரியவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, விற்கப்பட்ட தேசிய வளங்களை மீட்போம் என்றார்கள். ஆனால் தற்போது விற்பதற்கு நாட்டில் வளங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவோம் என்றார்கள். ஆனால் இன்று உரத்தை தேடி விவசாயிகள் கோவணத்துடன் வீதிக்கு வர வேண்டி இருக்கின்றனர்.

அதேபோன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் இருக்க வேண்டி இருக்கின்றது.

அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவித்து ஒட்டு மொத்த பெந்தோட்ட மக்களையும் கம்பனிக்காரர்களின் அடக்குமுறைக்கு தள்ளி இருக்கின்றார்கள்.

ஆசியர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாமல் போயிருப்பதால் இன்று கல்வி கட்டமைப்பு வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நாட்டில் டொலர் இல்லை. டொலருக்காக வெளிநாடுகளில் கையேந்த வேண்டி இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அனைத்துக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதையும் அதனை வாபஸ் பெற்றுக் கொள்வதையுமே செய்கின்றது.

இரசாயன உரத்துக்கு தடை விதித்ததால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைந்து அவர்களின் வருமானமும் குறைவடைந்திருக்கின்றது. அதன் காரணமாக பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்ட கம்பனி உரிமையாளர்களுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது.

அதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் தேயிலை உற்பத்திக்கு தேவையான பசளைகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேயிலை உற்பத்தியினால் கிடைக்கப் பெறும் வருமானத்தில் 2 வீதமே பசளைக்கு செலவிட வேண்டி இருக்கின்றது. அதனையும் அரசாங்கத்துக்கு செலவிட முடியாது இருக்கின்றது. பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைந்தால் அது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் வீழ்ச்சியடையச் செய்யும் என்றார்.

No comments:

Post a Comment