பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக உதயகுமார வுட்லர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக உதயகுமார வுட்லர் நியமனம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சர் உதயகுமார வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையில், உதவி பொலிஸ் அத்தியட்சராக தரமுயர்த்தப்பட்டுள்ள அவர், பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கடமையினை முன்னெடுக்கும் முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குருணாகல், புனித ஆனாள் வித்தியாலயத்தின் பழைய மாணவரான உதயகுமார வுட்லர், நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்களில் சவாலான காலப்பகுதியில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆவார்.

குறிப்பாக தொம்பே பொலிஸ் நிலையத்தை சிவிலியன்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தீ வைத்து கொழுத்திய பின்னர், மீள அதே இடத்தில் பொலிஸ் நிலைய கடமைகளை ஆரம்பிக்கும் போது தொம்பே பொலிஸ் பொறுப்பதிகாரியாக வுட்லர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் ஊர்காவற்றுரையில் மாணவி வித்யா படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து யாழ். முழுதும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், யாழ். நீதிமன்றம் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

இதன்போதும் யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக உதயகுமார வுட்லரே நியமிக்கப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கடமைகளை முன்னெடுக்க முடியுமான இயலுமை கொண்ட உதயகுமார வுட்லர், கடந்த வாரம் 225 உதவி பொலிஸ் அத்தியட்சர் தரமுயர்வின் போது அப்பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

ஏறாவூர், வெள்ளவத்தை, தொம்பே, யாழ்., கட்டுநாயக்க விமான நிலையம், நீர்கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ள உதய குமார வுட்லர், 2010 ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர்கள் சங்கத் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது பொலிஸ் பரிசோதகர்களுக்கான கழுத்துப் பட்டி உள்ளிட்டவற்றை அவர் வடிவமைந்திருந்தமையும், கடமையின் போது உயிர் நீத்த பொலிஸ் பரிசோதகர்களுக்கு என நினைவுத் தூபி ஒன்றினை அமைத்ததிலும் அவரது பணி தவிர்க்க முடியாததாக இருந்தது என பொலிஸ் பரிசோதகர் சங்க தகவல்கள் தெரிவித்தன.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் ஆலோசகராக 5 வருடங்கள் கிழக்குத் தீமோர் மற்றும் தென் சூடானில் கடமையாற்றியுள்ள உதயகுமார வுட்லர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான பட்டப் படிப்பை நிறைவு செய்தவராவார்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு, நீர்கொழும்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கெளரவிப்பினையும் பெற்றிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே அவர் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment