திருக்குமார் நடேசனை விசாரணைக்கு அழைத்தது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

திருக்குமார் நடேசனை விசாரணைக்கு அழைத்தது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள, அவர் இவ்வாறு 8 ஆம் திகதி வெள்ளியன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அவ்வாணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

பன்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்த நிலையில் ஜனாதிபதி விசாரணைக்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேஷன் அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது நிருபமா ராஜபக்ஷவும், திருக்குமார் நடேஷனும் நாட்டில் இல்லை என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள போதும், விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ள பின்னணியில், வாக்கு மூலம் வழங்க அவர் அங்கு ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பன்டோரா பேப்பர்ஸில் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசுபொருளாக மாரியுள்ளது.

நிரூபமா ராஜபக்ஷ கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சராக கடமையாற்றிய நிலையில் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆலோசகராகவும், ஹோட்டல் தொழில்முனைவோராகவும் பணிபுரிந்துள்ளதாக கூறப்பட்டுகிறது.

இவ்வாறான நிலையில், இவர்கள் அமெரிக்கா , பிரித்தானியா, வர்ஜின் தீவுகள் மற்றும் நியூஸிலாந்தில் 8 நிறுவனங்களை நிறுவியுள்ளதாக பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் நகரிலும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் சொகுசு குடியிருப்பு தொகுதிகளை கொள்வனவு செய்வதற்காக இதில் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திருக்குமார் நடேசனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனம் ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளதாகவும் பன்டோரா பேப்பர்ஸ் தெரிவிக்கிறது.

இதனிடையே, சிங்கப்பூரிலுள்ள நிறுவனம் ஒன்றும் இந்த செயற்பாடுகளுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவ்வாவணங்கள் கூறுகின்றன.

2016 ஆம் ஆண்டு கறுப்பு பணம் சுத்திகரிப்பு தொடர்பில் திருக்குமார் நடேசன் மீ து இலங்கையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையிலும் சிங்கப்பூரின் நிறுவனம் ஊடாக அவரது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டில் திருக்குமார் நடேசனின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 160 மில்லியனுக்கு அதிகமாகும்.

பிரத்தியேக நிறுவனம் ஊடாக அவர் பெறுமதியான கலை படைப்புக்களை போலி ஆவணம் தயாரித்து வரி ஏய்ப்பு செய்து தன்வசம் வைத்திருப்பதாகவும் பண்டோரா ஆவணம் தெரிவிக்கின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் வினவுவதற்கு குறித்த பண்டோரா பேப்பரஸ் ஆவணங்களை வெளிப்படுத்திய சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் ஒன்றியம் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவியான முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்தாலும் அவர்கள் பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டதாக அவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்பட்ட இரண்டு நிறுவனங்கள் ஊடாக மேலும் இரண்டு இலங்கையர்களுக்கு அனுகூலம் பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களைவிட மேலும் பல உலக தலைவர்கள், பிரபலங்கள் தொடர்பிலும் அந்த ஆவணங்களில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்களை முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் மறுத்துள்ள நிலையில், ஜனாதிபதியிடம் சுயாதீன விசாரணை கோரியுள்ளார்.

இந்நிலையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிடம் விசாரணைகளை நடாத்த ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment