நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை அறிய தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை அறிய தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா)

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறுகோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7 வருட காலமாக 14 சர்வதேச நிதிநிறுவனங்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பினால் கடந்த 3 ஆம் திகதி 'பன்டோரா பேப்பர்ஸ்' என்ற ஆவணம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சுமார் 12 மில்லியனுக்கும் மேற்பட்ட அறிக்கைகள், கடிதங்களைக் கொண்ட அந்த பன்டோரா ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமார் நடேன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய நிதிக் கொடுக்கல், வாங்கல்கள் பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிருபமா ராஜபக்ஷ ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கின்ற நிலையில், 1994 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவரது சொத்துக்களின் விபரங்களைப் பகிரங்கப்படுத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் உறுப்பினர்களான ரெஹான் ஜயவிக்ரம, சமித் விஜேசுந்தர, சமத்கா ரத்நாயக்க மற்றும் ஹிரன்யா ஹேரத் ஆகியோர் வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தைக் கையளித்துள்ளனர்.

'மேற்குறிப்பிட்ட முன்னாள் பிரதியமைச்சர் மீதான ஊழல் மற்றும் சொத்துச் சேகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் நாம் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருக்கின்றோம். உண்மை மறைக்கப்படுவதை அதன் மூலம் தடுக்க முடியும்' என்று சமத்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment