(நா.தனுஜா)
'பன்டோரா பேப்பர்ஸ்' ஆவணத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசனின் சொத்துக்கள் அனைத்தும் உண்மையில் ராஜபக்ஷ குடும்பத்திற்குரியவையாகும். அவ்வாறிருக்கையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற பன்டோரா ஆவணம் தொடர்பான விசாரணைகள் எவ்வாறு சுயாதீனத் தன்மை வாய்ந்தவையாக அமையும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'தேசப்பற்றாளர்கள்' என்று கூறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடமேறிய அரசாங்கம் தற்போது நாட்டின் வலுசக்தி உள்ளடங்கலாக அனைத்து வளங்களையும் வெளிநாடுகளுக்கு வழங்கி, பாரிய காட்டிக் கொடுப்பைச் செய்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் மிக முக்கிய வளங்களான மின்சாரம், எரிபொருள் மற்றும் துறைமுகம் ஆகிய மூன்றும் இப்போது வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நள்ளிரவில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
மறுபுறம் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் கடந்த வாரம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி கொழும்புத் துறைமுகத்திற்குச் சொந்தமான 13 ஏக்கர் காணியை சீனாவிற்கு வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு வருகை தந்து திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்.
ஆனால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகின்றார்.
அத்தோடு செலெந்திவா நிறுவனத்தின் ஊடாக கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது எமது நாடு வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு முகங்கொடுத்திருக்கின்றது.
அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'பன்டோரா பேப்பர்ஸ்' எனப்படும் ஆவணங்களில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள் தொடர்பான விபரங்களைக் கடந்த காலத்தில் நாங்கள் வெளிப்படுத்தினோம். அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் 2015 ஆம் ஆண்டில் எமக்கு வாக்களித்தார்கள்.
இருப்பினும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பாதுகாக்கும் கொள்கையில் செயற்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவில்லை.
பசில் ராஜபக்ஷவின் பணத்தை நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரே முகாமை செய்கின்றார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்த நிலையில், அது உண்மை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், அதனை ஒருபோதும் தமது பெயரில் முதலீடு செய்யமாட்டார்கள். அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டு கடந்த காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அண்மைக் காலங்களில் ஒவ்வொருவராக வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
20 ஆவது திருத்தத்தின் ஊடாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கான அதிகாரிகள் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்படுகின்றார்கள். அவ்வாறிருக்கையில் பன்டோரா ஆவணங்கள் தொடர்பில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் சுயாதீனமானவையாகவும் நியாயமானவையாகவும் அமையும் என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?
இவற்றுக்கு ஏற்புடைய வகையில் அண்மையில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிதி திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றது. அச்சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்த கறுப்புப் பணத்தை மிகச்சொற்ப வரியுடன் சட்டபூர்வமான பணமாக மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது.
எனவே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை சட்டபூர்வ பணமாக மாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுகின்றது.
அடுத்ததாக நாளுக்குநாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்து வருகின்றது. குறைந்தப்பட்சம் அரிசியின் விலையைக்கூட அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. டட்லி சிறிசேன உள்ளிட்ட அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசியின் விலையை நிர்ணயிக்கின்றார்கள்.
சீமெந்து தட்டுப்பாடு காரணமாக நிர்மாணத்துறைசார் ஊழியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விலையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே அரசாங்கத்தின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு, எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதற்கு ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment