இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய ஈரானின் முதல் ஜனாதிபதி மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய ஈரானின் முதல் ஜனாதிபதி மரணம்

ஈரானின் முதல் ஜனாதிபதி அபுல்ஹசன் பனிசதர் (வயது 88) மரணமடைந்தார்.

குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அபுல்ஹசன் பனிசதர் பாரிஸில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார் என தெரிவித்துள்ளனர்.

ஈரானில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் அபுல்ஹசன் பனிசதர் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரானின் முதல் ஜனாதிபதியாக அபுல்ஹசன் பனிசதர் பொறுப்பேற்றார்.

ஈரானில் 1979 இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் மற்றும் அதி உயர் தலைவராக இருந்த ஆயத்துல்லா ரூஹுல்லா கொமைனிக்கு நெருங்கிய சகாவாக இருந்த அபுல்ஹசன் பனிசதர் 1980 பெப்ரவரியில் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின் அவரது தாராளவாத கொள்கைகள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் மீதான எதிர்ப்பிற்காக அபுல்ஹசன் பனிசதர் மீது கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன.

1980 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்பு ஈரானில் இருந்து தப்பி பிரான்சில் வசித்து வந்தவர் நேற்று (09) பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

தனது கடைசி நேர்காணலில் அபுல்ஹசன் பனிசதர் கூறியதாவது, ஈரானில் உள்ள எட்டு அரசியல் கட்சிகளை கண்டனம் செய்ய ஆயத்துல்லா ரூஹுல்லா கொமைனியின் கட்டளைக்கு இணங்க மறுத்தது மற்றும் ஈரான் - ஈராக் போரின்போது அமெரிக்கர்களுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை ஒப்புதல் அளித்தது, அவரை பதவி நீக்கம் செய்யவும், அதைத் தொடர்ந்து பிரான்சுக்கு நாடு கடத்த வழிவகுத்தது என கூறினார்.

No comments:

Post a Comment