(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பாராளுமன்றம் வழங்கியுள்ள வாகனத்தை, கயந்த கருணாதிலக்க எம்.பி தவறாக பயன்படுத்துவதாக மொஹமட் முஸம்மில் சபையில் குற்றம் சுமத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு WP KY 3628 என்கிற இலக்கத்தைக் கொண்ட வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் எரிபொருளுக்காக மாதத்துக்கு 114,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் இந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாகனம் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அந்த வாகனத்தை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவே பயன்படுத்துகிறார். இந்த வாகனத்தை பயன்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை.
இந்த வாகனத்துக்கான அனைத்து செலவுகளுக்குமான நிதியும் பாராளுமன்றமே வழங்குகிறது. எனவே இந்த வாகனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, இதுவொரு சில்லரை பிரச்சினை. கேட்பதற்கு ஒன்றும் இல்லாததற்காகவே இதனை அவர் கேட்கின்றார். அத்துடன் இந்த வாகனம் எனது பணியாட் தொகுதிக்கு வழங்கப்பட்டதாகும். எனது பணியாட் தொகுதியின் ஊழியர் ஒருவரே இந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறார்.
அத்துடன் ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களின் 163 அமெரிக்க டொலர் மில்லியன் தொடர்பான திருட்டுக் கணக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கின்றது. சில்லரை பிரச்சினைகளை கேட்காமல் இது தொடர்பில் கதையுங்கள் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த கயந்த கருணாதிலக்க, மொஹமட் முஸம்மில் தெரிவிப்பது போல் எனக்கு அவ்வாரான வாகனம் ஒன்று இல்லை. எதிர்க்கட்சி பிரதம கொறடாவின் பணியாட் குழுவுக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கும் வானம் பணியாட் தொகுதி ஒருவர் பயன்படுத்துவதை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்றார்.
No comments:
Post a Comment