இந்திய அணிக்கு எதிரான ‍போட்டி சமநிலையில் : புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது இலங்கை - News View

Breaking

Thursday, October 7, 2021

இந்திய அணிக்கு எதிரான ‍போட்டி சமநிலையில் : புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது இலங்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டியின் முழு நேர முடிவில் இரண்டு அணிகளுமே ஒரு கோலையும் அடிக்க முடியமால் போனதால் போட்டி 0 க்கு 0 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுடனும் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சமநிலையைத் தழுவிய இந்திய அணியை இன்றையதினம் எதிர்த்தாடியது.

மாலைத்தீவுகளின் மாலே நகரிலுள்ள தேசிய கால்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றுவரும் 13 ஆது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று பிற்பகல் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் இலங்கை அணி, பலமிக்க இந்திய அணியை எதிர்கொண்டது.

போட்டியின் முதல்பாதியில் இரண்டு அணிகளுமே மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன. இரண்டு அணிகளுமே கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடையவே, போட்டியின் முதல் பாதி 0க்கு 0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியிருந்தமை சிறப்பம்சமாகும்.

மேலும், இன்றையப் போட்டியிலும் இலங்கை அணித் தலைவரும், கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா எதிரணி வீரர்கள் கோல் வலை நோக்கி அடித்த பந்துகளை அற்புதமாக தடுத்தார்.

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சிவப்பு அட்டை பெற்று கடந்த போட்டியில் விளையாடமலிருந்த டக்ஸன் பியுஸ்லஸின் போட்டித் தடை விலக்கப்பட்டு இன்றைய போட்டியில் களமிறங்கினார். இவரின் மீள் வருகையினால் இலங்கை அணியின் தடுப்பாட்டம் மேலும் சிறப்பாக இருந்தது.

இரண்டாம் பாதியில் வீரர்களுக்கு அடிக்கடி உபாதை ஏற்பட்டதன் காரணமாக 8 நிமிட உபாதையீடு நேரம் வழங்கப்பட்டது.

இதன்போது இந்திய வீரர்கள் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணமிருந்த போதிலும், இலங்கை அணி தடுப்பாட்ட உத்தியை பிரயோகித்தனர். இறுதியில் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியாமல் போனதால் இப்போட்டி 0 க்கு 0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

இந்தப் போட்டி சமநிலையில் முடிந்ததால் தமது புள்ளிக் கணக்கை துவக்கிய இலங்கை ஒரு புள்ளியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

மறுமுனையில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளுமே சமநிலையில் முடிவடைந்ததால் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நேபாளமும், இரண்டாவது இடத்தில் பங்களாதேஷ் அணியும் உள்ளன. கடைசி இடமான 5 ஆவது இடத்தில் ஒரு புள்ளியைக் கூட பெறாத மாலைத்தீவுகள் உள்ளது.

இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்புச் சம்பியனும் போட்டி ஏற்பாடு நாடான மாலைத்தீவுகள் அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

No comments:

Post a Comment