சுற்றியுள்ளவர்கள் மோசமானவர்களாக இருந்தால் தலைவர் எந்தளவு நேர்மையானவராக இருந்தாலும் பயனில்லை : நான் பொலன்னறுவைக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது - மைத்திரிபால சிறிசேன - News View

Breaking

Monday, October 11, 2021

சுற்றியுள்ளவர்கள் மோசமானவர்களாக இருந்தால் தலைவர் எந்தளவு நேர்மையானவராக இருந்தாலும் பயனில்லை : நான் பொலன்னறுவைக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது - மைத்திரிபால சிறிசேன

(எம்.ஆர்..எம்.வசீம்)

நாட்டின் தலைவர் எந்தளவு தூய்மையானவராக நேர்மையானவராக இருந்தாலும் அவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு நேர்மையான அமைச்சரவையும் இருக்க வேண்டும். சிறிமா பண்டாரநாயக்க சிறந்த தலைவராக மாறியதும் அவரை சுற்றி சிறந்த அணியொன்று இருந்ததனாலாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

சிறிமா பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூம் தொழிநுட்பத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மதம், மொழி விடயங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையில் இருந்த கொள்கையில் சிறிலங்கா சுதந்திர கட்சி மாறுபட்டது. எமது கட்சிக்கு சிறந்த தூரநோக்கு, கொள்கை இருந்தது. பண்டாரநாயக்கவின் கொள்கையும் அதுவாகும். அதனால்தான் சிறிமா பண்டாரநாயக்க தேசிய மற்றும் சர்வதேச தலைவராக முடிந்தது.

அத்துடன் வெளிநாட்டு கொள்கையை சிறந்த முறையில் செயற்படுத்தினார். வல்லரசு நாடுகள், எமது நாட்டு வளங்களை மக்கள் மயமாக்கினால் எமக்கு எரிபொருள் வழங்குவதில்லை என தெரிவித்து அம்மையாரை அச்சுறுத்தினார்கள்.

அப்போது அம்மையார் அந்த தலைவர்களுக்கு அடிபணியவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் எகிப்து, ஈரான் நாட்டு தலைவர்கள் முன்வந்து எமது நாட்டுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக தெரிவித்து, கப்பல் கணக்கில் எரிபொருள் வந்து சேர்ந்தது.

அத்துடன் சிறிமா பண்டாரநாயக்க உண்மையான தலைவராக செயற்பட காரணமாக இருந்தது, அவரை சுற்றி இருந்த நல்ல அமைச்சரவையாகும். தலைவர் எந்தளவு தூய்மையானவராக, நேர்மையானவராக இருந்தாலும், அவர் சிறந்த தலைவராக இருப்பதற்கு உண்மையான அமைச்சரவை ஒன்று அவருக்கு இருக்கவேண்டும்.

அண்மைக்கால வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அனவுக்கு உரப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. எதிர்வரக்கூடிய தினங்களில் எனக்கு பொலன்னறுவைக்கு செல்ல முடியுமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது. அந்தளவுக்கு விவசாயிகள் உரம் இல்லாமல் விரக்தியடைந்திருக்கின்றனர்.

ஆனால் 70/77 காலப்பகுதியில் சிறிமா அம்மையார் விவசாய புரட்சியை நாட்டில் ஏற்படுத்தினார். விவசாயிகளுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் போதிய வசதிகளை பெற்றுக் கொடுத்தார்.

என்றாலும் அதன் பிறகு 1978 இல் ஏற்பட்ட திறந்த பொருளாதார கொள்கை காரணமாக தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைய ஆரம்பித்து. திறந்த பொருளாதார கொள்கை தேவை, ஆனால் அதனை முகாமைத்துவம் செய்ய தவறியதன் விளைவே நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment