மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மூன்று மாதங்களில் மீண்டும் நாட்டில் கொரோனா அலையொன்று உருவாகலாம் - எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்கள் - News View

Breaking

Sunday, October 10, 2021

மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மூன்று மாதங்களில் மீண்டும் நாட்டில் கொரோனா அலையொன்று உருவாகலாம் - எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்கள்

(ஆர்.யசி)

கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் நாடு திறக்கப்பட்டிருந்தாலும் கூட கொவிட் பரவல் அச்சுறுத்தல் நிலைமையில் இருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை. நாடு திறக்கப்பட்டுள்ள சூழலில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் நாட்டில் கொரோனா அலையொன்று உருவாகலாம் என சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட கால முடக்கத்தின் பின்னர் நாட்டின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்களின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் சுகாதார நிலைமைகள் குறித்தும், கொவிட் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போது,அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்தன இது குறித்து கூறுகையில்,

கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகளில் இருந்து நாடு முழுமையாக விடுபடவில்லை. டெல்டா வைரஸ் பரவல் நிலைமைகள் இன்னமும் காணப்படுகின்றது. அதேபோல் அடையாளம் தெரியாத வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் உள்ளனர். இவர்கள் மூலமாக வைரஸ் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளது.

ஆகவே தற்போது வெவ்வேறு பொருளாதார காரணிகளுக்காக நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் வைரஸ் பரவல் இல்லை என்ற மனநிலைக்கு எவரும் வரக்கூடாது என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கையாகும்.

இப்போது பொறுப்புகளை உணராது செயற்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஒரு கொவிட் அலைக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும். அதுமட்டுமல்ல நாடு திறக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்திலும் கூட கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர் அடையாளம் காணப்படுகின்றனர். அவ்வாறான நிலையில் பொதுமக்கள் தமது நிலைமைகளை உணர்ந்து செயற்படாது போனால் நாடாக மீண்டும் நாம் வீழ்ச்சியடைவோம் என்றார்.

அரச மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் இது குறித்து கூறுகையில், இப்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொவிட் வைரஸ் முடிவுக்கு வந்துள்ளதாக எவரும் கருத வேண்டாம். கடந்த கால கட்டுப்பாட்டுகளின் காரணமாக தற்போது எமக்கு தற்காலிக இடைவேளை ஒன்று கிடைத்துள்ளது.

இதில் எம்மால் சற்று நிம்மதி பெருமூச்சி விட முடியுமே தவிர இது நிரந்தரமாக விடுதலை என கருதி மீண்டும் மோசமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம்.

இப்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாம் சகலரும் செயற்படும் விதத்தில்தான் அடுத்ததாக நாடு எவ்வாறு பயணிக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

ஒரு சில சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் மோசமான தீர்மானங்கள், செயற்பாடுகள் காரணமாக மீண்டும் நாட்டில் கொவிட் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலை உள்ளது. பெரும்பாலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் நாட்டில் கொவிட் பரவல் ஏற்பட அதிக சாதக நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

கொவிட் வைரஸ் பரவுகின்றதா என்ற ஆய்வுகள் கூட முன்னெடுக்கப்படவில்லை. பரிசோதனைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாட்டின் உண்மை நிலைமைகளை கண்டறிய முடியாது போகும் என்றார்.

No comments:

Post a Comment