நுகர்வோரை பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தையும் அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் - அஜித் மான்னப்பெரும - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

நுகர்வோரை பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தையும் அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் - அஜித் மான்னப்பெரும

(எம்.ஆர்.எம்.வசீம்)

விலை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய அனைத்து வர்த்தமானி அறிவிப்புக்களையும் அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளது. அதனால் நுகர்வோரை பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தையும் அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்குவதற்கே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது என்ற செய்தி சர்வதேசத்துக்கு செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் எமது நாட்டை சர்வதேசத்தின் சந்தையாக ஆக்கி இருக்கின்றது. அதனால்தான் சீனா, அமெரிக்கா, இந்தியா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு எமது நாட்டின் வளங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றன.

இது முதலீடு அல்ல. விற்பனை. முதலீடு என்றால் இரண்டு தரப்பினருக்கும் அதில் இலாபம் இருக்க வேண்டும். முதலீடு என்ற பெயரில் எமது நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு மொத்தமாக அரசாங்கம் வழங்கியிருக்கின்றது.

அதேபோன்று கொவிட் நிலைமையில் வியாபாரிகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அரசாங்கம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்கும் விலை கட்டுப்பாடு விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் வியாபாரிகளிடமிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கென அவசரகால சட்டத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக் கொண்டது.

தற்போது அத்தியாவசிய அனைத்து பொருட்களினதும் கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளது. அப்படியானால் அவசரகால சட்டத்தையும் அரசாங்கம் உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் அத்தியாவியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்த வர்த்தமானி அறிவிப்புகளை நீக்கி விட்டு, அதனை பாதுகாப்பதற்காக கொண்டு வந்த அவசரகால சட்டத்தை மாத்திரம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால், மக்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்குவதற்கே அது பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கின்றது. அதனால் சர்வதேச நாடுகளுக்கு அது தவறான செய்தியையே கொண்டு செல்லும்.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கட்டுப்பாட்டு வர்த்தமானி அறிவிப்புகளை அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளதன் மூலம் அந்த பொருட்களின் விலைகளை நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ஏற்படுத்தி இருந்தது. தற்போது அந்த விலைக்கு அரிசி நாட்டில் எங்கும் இல்லை. மாறாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலைக்கே அரிசி இன்று கடைகளில் விற்பனையாகின்றது.

அதேபோன்று இன்னும் ஓரிரு தினங்களில் பால்மா, எரிவாயு, சீமெந்தி போன்ற பொருட்களும் உரிய நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் விலைக்கே சந்தையில் விற்பனையாகும். பொருட்களின் விலை நிர்ணயத்தை நிறுவனங்களே கையில் எடுத்திருக்கின்றன. அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் அரசாங்கம் தொடர்ந்து இதற்கு இடமளித்தால் எதிர்காலத்தில் எரிபொருள், மின்சாரம் மற்றும் ஏனைய சேவைகளின் கட்டணங்களும் அந்த நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலையே ஏற்படும். அரசாங்கத்திடம் சரியான முகாமைத்தும் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

அதனால் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அனுபவம் இல்லை என்றால் அனுபவம் உள்ளவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அனுபவம் உள்ளவர்களுக்கு ஆட்சியை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment