சீனத் தூதரக கடிதம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது - இலங்கை அரசாங்கம் - News View

Breaking

Wednesday, October 6, 2021

சீனத் தூதரக கடிதம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது - இலங்கை அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

அபாயம் மிக்க பற்றீரியாக்கள் அடங்கிய சீன சேதன உர இறக்குமதி தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடிதம் சீன - இலங்கை நட்புறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அமைச்சரவை, அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் என்பன நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு அமையவே செயற்பட வேண்டும். அதற்கமையவே அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே சீன உரத்தினை நிராகரித்துள்ளார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த உரத்தில் அபாயம் மிக்க பற்றீரியாக்கள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் இறக்குமதி இடை நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தினால் விவசாயத்துறை அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அமைச்சர்களான ரமேஷ் பத்திரண மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கையில், சீனாவின் சேதன உரம் இறக்குமதி தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் எம்மால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நாட்டுக்கு பொருத்தமான பாதிப்புக்களை ஏற்படுத்தாத பாதுகாப்பான உரம் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஒழுக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

இது தொடர்பான தகவல்களும் முறையாக நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் தரத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவையும் மாற்றியமைக்கப்பட மாட்டாது. எனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தில் உயர்ந்த உரம் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்று உறுதியளிக்கின்றோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரு நாடுகளும் புரிதலுடனேயே செயற்படுகின்றன என்றார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில், சீனத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த உரத்தில் பற்றீரியாக்கள் இனங்காணப்பட்டமையால் அதனை நிராகரித்தமை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் சீன - இலங்கை இரு தரப்பு உறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இரு அரசுகளுக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் காரணி அல்ல. அமைச்சரவை, அமைச்சர்கள், அரசாங்கம் என்பன நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு அமையவே செயற்பட வேண்டும்.

அதற்கமையவே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சீன உர இறக்குமதியை நிராகரித்துள்ளார். எவ்வாறிருப்பினும் சீனத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடிதம் எந்த வகையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்கும் வகையானதல்ல என்றார்.

No comments:

Post a Comment