மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படுவதை தடுக்க சுற்றுலா செல்வதை தவிருங்கள் : நாட்டையும், தமது பிள்ளைகளையும் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் - விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படுவதை தடுக்க சுற்றுலா செல்வதை தவிருங்கள் : நாட்டையும், தமது பிள்ளைகளையும் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் - விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படாத போதிலும், பெருமளவானோர் தூரப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு டிசம்பர் மாதம் வரையிலாவது சுற்றுலா பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. நீண்ட விடுமுறை தினங்கள் வருவதற்கு முன்னரே நாம் சுற்றுலாக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவித்திருந்தோம்.

நாட்டைப் பற்றியும், தமது பிள்ளைகளைப் பற்றியும் சிந்தித்து சுற்றுலா செல்வதை தற்காலிகமாகக் கைவிடுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த இரு மாதங்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொவிட் நிலைமை குறைவடைந்துள்ளது. எனினும் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டுக்கு முன்னரும் இதே நிலைமையே காணப்பட்டது.

ஆனால் சித்திரைப் புத்தாண்டின் போது இவ்வாறு சகல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்றமையால் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

இது தொடர்பில் சிந்தித்துதான் சுற்றுலாக்களை தவிர்க்குமாறு கோரினோம். தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பேண வேண்டியது அத்தியாவசியமாகும்.

எனவே அத்தியாவசிய காரணிகளுக்காக அன்றி அநாவசிய காரணிகளுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே டிசம்பர் மாதம் வரையிலாவது சுற்றுலா செல்லுதல், மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை தவிரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment