எண்ணெய் விலையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு - News View

Breaking

Tuesday, October 19, 2021

எண்ணெய் விலையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு

எண்ணெய் விலை கடந்த சில ஆண்டுகளில் காணாத அளவில் அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரங்கள் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மீண்டுவரும் வேளையில், எண்ணெய்க்கான தேவை அதிகரிப்பது ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட வட்டாரங்களில் எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாயின. அது விமான எரிவாயுச் சந்தைக்கு உந்துதலை அளித்துள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், நிலக்கரி, இயற்கை எரிவாயு, ஆகியவற்றின் இருப்பில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றை நம்பியிருந்த மின் உற்பத்தி நிலையங்கள், தற்போது எரிவாயு எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அதுவும் எண்ணெய் விலையின் ஏற்றத்துக்குக் காரணமாகியுள்ளது. 

அதன் மூலம், இவ்வாண்டு 4ஆம் காலாண்டில், எண்ணெய்க்கான தேவை நாளொன்றுக்கு 450,000 பீப்பாய்கள் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ப்ரென்ட் எண்ணெய் நேற்று ஒரு வீதத்தால் அதிகரித்து பீப்பாய் ஒன்று 85.73 டொலர்களாக உயர்ந்தது. இது 2018 ஒக்டோபருக்கு பின்னரான அதிக விலையாக உள்ளது.

மறுபுறம் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெயும் 1.4 வீதத்தால் அதிகரித்ததால் பீப்பாய் ஒன்று 83.40 டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டு ஒக்டோபருக்கு பின்னரான அதிக விலையாகும்.

இந்த இரு எண்ணெய்களும் கடந்த ஒரு வாரத்தில் 3 வீதம் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றமானது வரவிருக்கும் வாரங்களிலும் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகின்றது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக்) அடுத்து வரவிருக்கும் நவம்பர் முதல் உற்பத்தியினை அதிகரிக்கலாம். இதன் மூலம் விநியோகமும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன. 

எனினும் இது அப்போது விலை குறைய காரணமாக அமையலாம் என்றாலும், தற்போதைக்கு விலை குறையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment