புலிகளினால் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் குடியேற்ற வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - News View

Breaking

Thursday, October 7, 2021

புலிகளினால் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் குடியேற்ற வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களுக்கான வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியுடன் வடக்கில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களால் மீண்டும் அவர்களின் பூர்வீக நிலங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் நிலவுகின்ற நிலையிலும் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தளம் மாவட்டத்திலும் ஏனையோர் வேறு சில பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக சிறுவர்கள் வேறு பாடசாலைகளில் கல்வி கற்கின்ற காரணத்தினால் மாற்று பாடசாலைகளை தெரிவு செய்ய முடியாத நிலையில் அவர்களின் வாக்குரிமைகள் போன்ற விடயங்களில் சிக்கல் நிலைமைகள் ஏற்படும்.

அதேபோல் இன்றும் அவர்களின் காணிகள், விவசாய நிலங்கள் வடக்கில் உள்ள போதிலும் அதனை நிரூபிக்க கூடிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத பிரச்சினை உள்ளது.

ஆகவே இது குறித்து விசேட கவனம் செலுத்தி பரிசீலனை செய்து அவர்களை அவர்களின் பூர்வீக நிலங்களில் குடியமர்த்தி அவர்களின் இருப்பிடங்களை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய இடங்களில் வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். எனவே அவர்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி அவர்களை மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment