எனது கொடும்பாவியை எரித்தாலும், உருவத்தை சேதப்படுத்தினாலும் தீர்மானத்திலிருந்து பின் வாங்க மாட்டோம் : விவசாயிகள் உரம் கேட்கும் வேளையில் அதனை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் வாக்கு கேட்கின்றீர்கள் - அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

எனது கொடும்பாவியை எரித்தாலும், உருவத்தை சேதப்படுத்தினாலும் தீர்மானத்திலிருந்து பின் வாங்க மாட்டோம் : விவசாயிகள் உரம் கேட்கும் வேளையில் அதனை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் வாக்கு கேட்கின்றீர்கள் - அமைச்சர் மஹிந்தானந்த

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

எனது கொடும்பாவி எரித்தாலும், எனது உருவத்தை சேதப்படுத்தினாலும் சேதன பசளையை நடைமுறைப்படுத்தும் இந்த திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னெடுத்த இந்த தீர்மானத்தில் இருந்து நாம் பின் வாங்க மாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் நாட்டில் உணவு தட்டுப்பாடு வராது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கூட மக்களை பட்டினியில் போடாது அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நாட்டின் உர பிரச்சினை குறித்தும் விவசாயிகளின் நெருக்கடி நிலைமை குறித்தும் எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இரசாயான உரத்தை நிறுத்தும் ஜனாதிபதியின் நோக்கம் நல்லதே, ஆனால் அவர் எடுத்த தீர்மானத்துடன் எம் அனைவராலும் ஒருமித்த நிலைப்பாட்டில் நிற்க முடியாமல் போயுள்ளது.

எமது அரசாங்கத்தில் பங்காளிகள், உறுப்பினர்கள் சிலர் வெளியில் வேறு காரணிகளை முன்வைத்தனர். அதுவே அரசாங்கமாக நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. இன்று விவசாயிகளுக்கு அனாவசிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் அவர்களும் போராட ஆரம்பித்துள்ளனர்.

விவசாயிகளின் அச்சம் நியாயமானதே, ஆனால் அவர்களை தூண்டி அரசியல் செய்கின்றனர். அவர்கள் உரம் கேட்கும் வேளையில் அதனை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் வாக்கு கேட்கின்றீர்கள்.

இந்த தீர்மானம் எடுக்க முன்னர் சகல மாவட்டங்களிலும் விவசாய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசினோம். வடக்கு கிழக்கில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரசாயன உரம் வழங்கவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விவசாயம் செய்தனர். ஆகவே பொய்யான பிரசாரங்களை உருவாக்கி விவசாயிகளை அச்சத்தில் வைத்துள்ளீர்கள்.

ஆனால் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுகின்றது, இப்போதும் உரம் இறக்குமதி செய்யப்படுகின்றது. சகல மாவட்டங்களுக்கும் உரம் பங்கிடப்படுகின்றது. ஒரு சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன, அதனை நாம் மறுக்கவில்லை ஆனால் எக்காரணம் கொண்டும் உணவு தட்டுப்பாடு வராது.

உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கூட மக்களை பட்டினியில் போடாது அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இப்போது சேதன பசளை அவசியப்படுகின்றது, அதனை வழங்கி விட்டு ஏனைய நைற்றிஜன் உரமும் வழங்குவோம்.

ஜனாதிபதி தலைமையில் இந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் மிகச்சிறந்த தீர்மானமாகும். நாட்டுக்கு மிகவும் ஆரோக்கியமான தீர்மானமாகும். ஆகவே இந்த தீர்மானத்தில் இருந்து நாம் பின் வாங்க மாட்டோம். ஆனால் விவசாயிகளுக்கு அனாவசிய அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை எமக்கு எதிராக தூண்டியுள்ளீர்கள்.

எனது கொடும்பாவி எரித்தாலும், எனது உருவத்தை சேதப்படுத்தினாலும் நாம் மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment