(இராஜதுரை ஹஷான்)
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் காணப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கல்வித்துறை ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே தற்போது ஆசிரியர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தை பெற்றோர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பண்டோரா பேப்பர்ஸ் எனப்படும் ஆவணக்கசிவு தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. ராஜபக்ஷ என்ற பெயர் உள்ளவர்கள் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நோக்கத்திற்காகவே இந்த ஆவணங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை பலவீனப்படுத்த சர்வதேச மட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் இடம்பெற்றன. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment