கடல் நீரை சுத்திகரித்து யாழ் குடாநாட்டுக்கு குடிநீர் திட்டம் - புதன்கிழமை மக்களிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

கடல் நீரை சுத்திகரித்து யாழ் குடாநாட்டுக்கு குடிநீர் திட்டம் - புதன்கிழமை மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வும், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தலும், யாழ்நகர பிரதேசத்திற்கு நீர்க் குழாய்களை பதித்தலும் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் புதன்கிழமையன்று (06) இடம்பெறவிருக்கின்றது.

நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையமானது 187.47 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கின்ற ஆறு (6) கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு இதன்மூலம் தூய குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த குடிநீர் திட்டத்துக்கு இதுவரை 25 கி.மீ தூரத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தூய குடிநீரை சுமார் 300,000 பாவனையாளர்களுக்கு முதல் கட்டமாக வழங்கும் வகையில் யாழ் நகர பிரதேசங்களில் 822 கி.மீ தூரத்திற்கு நீர்க் குழாய்களை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் யாழ் மாவட்டத்தில் வசிக்கின்ற சுமார் 184 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.35,881.49 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது பாரிய நீர் வழங்கல் திட்டமாகும்.

அன்றைய தினம் நிகழ்வுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அலரி மாளிகையிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களைப் பேணி மெய்நிகர் தொழிநுட்பத்தின் வழியாக கலந்துகொள்வார்கள்.

முதலாவது நிகழ்வாக நெயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் காலை 10.30 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும். 

இந்த நிகழ்வில் கிராமிய, பிரதேச நீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிராதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிசி யோகோயமா, யாழ் நகர சபை மேயர் மணிவண்ணன் சந்திரலிங்கம் உட்பட மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுபீட்சத்தின் இலக்கின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டமானது அப்பிரதேசத்து மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கான தீர்வாகவும், அம்மக்களின் தாக்கத்தை தீர்க்கும் உன்னதமான கருத்திட்டமாகவும் கருத முடியும்.

இன்றைய உலகில் விரைவாக அருகி வரும் வளங்களில் மிக முக்கியமான ஒன்றாக நீர் இருக்கிறது. இந்த புவியில் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் சூழப்பட்டிருந்தாலும் மனிதனின் அன்றாடப் பாவனைக்கு சுத்தமான தூய நீர் அருகிக் கொண்டே வருகின்றது. நீர் வளத்தின் பற்றாக் குறைக்கும், நீர் வளம் அருகி வருவதற்கும் பிரதான காரணம் மனிதனின் பொறுப்பற்ற நடத்தையே ஆகும். 

நீர் வளத்தில் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாடானது எதிர்காலத்தில் பாரிய நீர்த்தட்டுப்பாட்டுக்கு மனித சமூகம் முகம் கொடுக்க நேரிடும் என்று சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் நீரின் தட்டுப்பாடு வெகுவாக நிலவுகின்ற போதிலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான தூய குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் இலங்கை அரசாங்கமும், நீர் வழங்கல் அமைச்சும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையும் இணைந்து முனைப்புடன் செயற்படுகின்றன.

2025 ஆம் ஆண்டு சகலருக்கும் சுத்தமான குடிநீர் என்ற மகத்தான இலக்கை நோக்கி வெற்றிநடை போடும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் திணைக்களம் என்பன இலங்கையில் சகல நிலப்பிரதேசங்களுக்கும் தூய குடிநீரை கொண்டு செல்லும் பணியினை காத்திரமாக தொய்வின்றி செய்து வருகிறன.

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு என்ற எண்ணக்கருக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் சிறப்பான கருத்திட்டங்களில் ஒன்றான யாழ் நகர குடி நீர் வழங்கல் திட்டம் மற்றும் நயினாதீவு நீர் வழங்கல் திட்டம் என்பன அமைகின்றன. 

இந்த நீர் வழங்கல் திட்டமானது யாழ் குடாநாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மக்களின் அன்றாடப்பவனைக்கு தூய நீர் இல்லாத ஒரு அசாதாரண சூழலில் இந்த நீர் வழங்கல் திட்டமானது குடாநாட்டு மக்களின் மிக நீண்ட கால தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வாக அமையும்.

அபிவிருத்தி அடைந்த பல நாடுகள் கடல் நீரை சுத்திகரித்து மனித பாவனைக்கு ஏற்ற வகையில் வழங்கிவருகின்றன. ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது குடிமக்களின் நன்மை கருதி கடல் நீரை சுத்திகரித்து பாவனைக்கு வழங்கி வருகின்றன. 

இலங்கையில் கடல் நீரை சுத்திகரித்து தூய குடிநீராக மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமானது முதன்முறையாக யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் பாரிய நீர் வழங்கல் வேலைத்திட்டமாக யாழ்ப்பாணம் -கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தை குறிப்பிடமுடியும்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த நீர் வழங்கல் திட்டம் நிறுவப்படுகின்றன யாழ்ப்பாண மக்களின் தாகம் தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் இந்தத் திட்டம். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மற்றுமொரு வெற்றிகரமான நீர் வழங்கல் திட்டமென்பது குறிப்பிடத்தக்கது. யாழ்குடாநாட்டின் நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொள்ளும் வசதியினை இந்த நீர் வழங்கல் திட்டமானது வழங்குகிறது.

அந்த வகையில் எதிர்காலத்தில் நீர் வளத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அடுத்த பரம்பரைக்கு இந்த நீர் வளத்தை குறையின்றி பெற்றுக்கொள்ளவும் தற்கால நீர் பாவனையாளர்கள் நீரை வீண் விரயம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் , நீர் வளத்தை அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவதன் மூலமும் , நீரை சிக்கனமாக பாவிப்பதன் மூலமும், நீரை தேவையின்றி விரயமாக்குவதை தவிர்ப்பதன் மூலமும் நீர் வளத்தை பாதுகாக்க முடியும். நீரின்றி வாழாது உலகு எனவே நீர் வளத்தை பாதுகாப்போம் சுபீட்சமாய் வாழ்வோம்.

No comments:

Post a Comment