வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கைதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
15 கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறியதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், ஏனைய கைதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளை ஈடுபடுத்தி இன்று மதியம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் தற்போது சிறைக்கூடத்தினுள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் சிறைக் கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரிசமமாக நடத்தும்படியும் கோரி வெலிக்கடை சிறைக் கைதிகள் சிலர் இன்று (23) பிற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தீர்வு கிடைக்கா விட்டால் சாகும் வரையில் உண்ணாவிரதம் போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தபோது, வெலிக்கடை சிறைச்சலை முன்றலுக்கு அம்புயலன்ஸ் வாகனமொன்றும் வந்து நிறுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையின் வாசல் காவலில் வழமைக்கும் அதிகமான சிறைச்சாலை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் அங்கு சற்று பரபரப்பு மிக்க சூழல் காணப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுமார் 20 வரையிலான சிறைக் கைதிகள் சிலர் பொரள்ளை கெம்பல் மைதானத்திற்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கக் கூடிய சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூரைக்கு மேல் ஏறியிருந்த குறித்த சிறைக் கைதிகள் தமது கைகளில் பதாகைகள் மற்றும் கறுப்பு, சிவப்பு நிறத்திலான கொடிகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பதாகைகளில், சிறைச்சாலை அதிகாரிகள் சிறை கைதிகளை நசுக்கி அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர். சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் வஞ்சகமான செயற்பாடுகள் குறித்து நாட்டின் தலைவர் மற்றும் மக்களது கண்கள் திறக்கட்டும் என்றும், ஜனாதிபதியே! சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளான எங்களுக்கு வேறுபாடு எதுவும் காட்டாமல் சரிசமமாக நடத்தும் படியும், சகல சிறைக் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும் படியும் அந்த பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.
மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் ஏந்தியிருந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment