முஸ்லிம்களின் சமய உணர்வுகளை நிந்திக்கும் வகையில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் கருத்தை வாபஸ் பெற வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

முஸ்லிம்களின் சமய உணர்வுகளை நிந்திக்கும் வகையில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் கருத்தை வாபஸ் பெற வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி அறிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம்களின் சமய உணர்வுகளை நிந்திக்கும் வகையில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. அந்த கருத்தை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டு் என தேசிய ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய ஐக்கிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொலிஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்து வரும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக மட்டுமன்றி முஸ்லிம்களின் சமய சமய நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அரசாங்கம் எல்லா வகையிலும் எல்லா தரப்பினர் மத்தியிலும் தனது செல்வாக்கை நாளுக்குநாள் துரிதமாக இழந்து வருகின்ற நிலையில், அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர பெரும் பாடுபட்ட மகா சங்கத்தினரும் அரசின் மீது நம்பிக்கை இழந்து அரசுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் போதித்து வருவதோடு அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கத் தயாராகுமாறு மக்களை வேண்டிக் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள இந்த அரசுக்கு தெரிந்த ஒரே மார்க்கமான இனவாத்தை மீண்டும் தூண்டி தூபமிட்டு வரும் செயற்பாடுகளில் அரசுக்கு ஆதரவான சேனாக்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளன.

ஆனால் ஏற்கனவே பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையானவர்கள் இத்தகைய பிரசாரங்களால் தாங்கள் முட்டாள் ஆக்கப்பட்டதை நன்கு உணர்ந்துள்ளனர். எனவே இந்த இனவாதத் தூண்டுதல்கள் அதன் ஆரம்ப கட்டத்திலேயே பிசுபிசுக்கத் தொடங்கி உள்ளதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.

இருந்தாலும் இது அரசின் திட்டமிட்ட செயல்தான் என்பதை மக்கள் உறுதியாக நம்பும் வகையில் இனவாத பௌத்த தேரர்களின் ஆதாரமற்ற அர்த்தமற்ற கூற்றை அங்கீகரித்து பொலிஸ்துறை அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை எல்லோரையும் ஆச்சரியம் அடைய வைத்தது.

ஆனால் பாராளுமன்றத்துக்கு வெளியே மிகவும் பொறுப்பான பதவியில் இருக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூற வேண்டிய பாதுகாப்பு செயலாளர் இனவாத சேனாக்களின் கருத்துக்களை மட்டம் தட்டி உத்தியோகப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார். இது சரத் வீரசேகரவின் கண்ணத்தில் விழுந்த அறையாக இருந்தாலும் அவருக்குள்ள பாராளுமன்ற சிறப்புரிமைகள் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த சரிவில் இருந்து தப்பும் வகையிலும் நாட்டு மக்களின் கவனத்தை திசை திரும்பும் வகையிலும் சரத் வீரசேகர அடுத்து தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் உலாவரும் குரல் பதிவுகளின் மூலம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வுக்கு அடுத்த படியாக தாங்கள் வணங்கக் கூடிய ஒருவர் இருப்பாரானால் அது சரத் வீரசேகரதான் என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இதுதான் சரத் வீரசேகரவின் மடமையின் உச்ச கட்டம்.

எந்த ஒரு முஸ்லிமிடம் இருந்தும் அவர் எப்பேற்பட்டவராயினும் சரி, எப்பேர்ப்பட்ட நிலையில் இருப்பினும் சரி அவருடைய வாயில் இருந்து இவ்வாறு ஒரு வார்த்தையோ சொற்றொடரோ வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையாகும்.

காரணம் முஸ்லிம்கள் எந்த ஒரு நிலையிலும் வணங்குவதற்கு தகுதியானவன் இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும், எந்த கட்டத்திலும் அந்த அந்தஸ்த்தைப் பெற எவராலும் முடியாது என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். இதுதான் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் சிறப்பம்சங்களில் பிரதானமானது.

இந்த அடிப்படையைத் தெரியாமல் முஸ்லிம்களின் அடிப்படை உணர்வுகளோடு விளையாடி இருக்கின்றார் சரத் வீரசேகர. ஆனால் இந்தக் கருத்துக்குப் பின்னரும் அம்பாறை மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது அவர்களின் அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கைகள் மீதும் உணர்வுகள் மீதும் எமக்கு சந்தேகத்தை உண்டாக்குகின்றது.

சரத் வீரசேகரவுக்கு இருக்கின்ற அதே பாராளுமன்ற வரப்பிரசாதம் இவர்களுக்கும் உண்டு அல்லவா? ஏன் அதை அவர்களும் பயன்படுத்தி அவருக்கு பதில் கூற முடியாது? தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் இறை விசுவாசத்தை கேலிக்கு உள்ளாக்கும் வகையில் அல்லவா அவரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இன்னமும் ஏன் இந்த மௌனம் என்பதுதான் புரியவில்லை.

அம்பாறை மாவட்ட உலமாக்கள், உலமா சபையினர் சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இந்த விடயத்தில் பெரும் பொறுப்பு உள்ளது. சரத் வீரசேகரவிடம் எந்தவொரு முஸ்லிமும் அப்படி சொல்லி இருக்க முடியாது என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். மாறாக அவர் அதை ஏற்க மறுத்தால் அவர் குறைந்த பட்சம் தன்னிடம் அப்படி சொன்ன ஒரு முஸ்லிமையாவது அடையாளம் காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது கருத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்.

No comments:

Post a Comment