இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் திறப்பு : முதல் விமானம் இலங்கையிலிருந்து தரையிறங்கியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் திறப்பு : முதல் விமானம் இலங்கையிலிருந்து தரையிறங்கியது

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம், ரூ. 260 கோடி இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்ப்பட்டுள்ளது.

புத்தபிரான் பரிநிர்வாணமடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய விமானம் முதலில் தரையிறங்கியுள்ளது. 

இவ்விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர்.

இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரிய, அமரபுர, ராமன்ய, மல்வத்த ஆகிய நிகாயக்களைச் (பிரிவுகளை) சேர்ந்த அனுநாயக்கர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மு.ப. 11.30 மணியளவில் அபிதம்ம தினத்தையொட்டி பரிநிர்வாண விகாரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். 

அதன் பின், சுமார் குஷிநகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நடப்படவுள்ளது.

அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினைப் பொருட்கள், புத்த சூத்திரங்களின் கையெழுத்துப் பிரதியையும் பார்வையிட உள்ளார்.


இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கை

குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவை கொழும்பிலிருந்து ஆரம்பித்துவைக்கப்படும் வப் போயா தினமான 2021 ஒக்டோபர் 20ஆம் திகதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த ஸ்தலமான குஷிநகர் மிகவும் தனித்துவமான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது. 2020 செப்டெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமையவேண்டும் என அறிவித்திருந்தார்.

2. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்கள் தலைமையிலான இலங்கையைச்சேர்ந்த பேராளர்கள் குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணிக்கவுள்ளது. அத்துடன் நான்கு இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோருடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கிய விகாரைகளைச்சேர்ந்த கிட்டத்தட்ட100 சிரேஸ்ட பௌத்த மதகுருமாரும் இந்த முதலாவது விமான சேவையில் பயணிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளும் இக்குழுவுடன் இணைந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

3. இந்தியாவின் பௌத்த வளாகத்தின் மையப் புள்ளியாக குஷிநகர் கருதப்படுவதுடன் புதிய சர்வதேச விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை கணிசமான அளவில் மேலும் பலப்படுத்தும். இந்த அங்குரார்ப்பண விமானசேவை மக்களிடையிலான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல் இரு அயல் நாடுகளுக்கும் இடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நாகரிக உறவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த இருதரப்பு உறவில் கலாசார, ஆன்மீக மற்றும் மொழியியல் பிணைப்புகளுக்கு பௌத்த மதம் மையமாக உள்ளது.

4. இலங்கையை சேர்ந்த இப்பேராளர்கள் குழு இந்தியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வாரணாசிக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். 2021 ஒக்டோபர் 20 ஆம் திகதி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்றையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2021 ஒக்டோபர் 21ஆம் திகதி மாலை கொழும்புக்குத் திரும்புவதற்கு முன் கங்கை தரிசனத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

5. இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபுதிமஹாவிகாரையிலிருந்து புனித கபிலவஸ்து புத்தர் சின்னங்களும் வப் போயா நாளில் நடைபெறும் இந்த முதலாவது விமான சேவையில் பயணிக்கவுள்ளன. புத்தபெருமானின் நினைவுச்சின்னங்களை தற்போது பாதுகாத்து வரும், ராஜகுரு ஶ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் அவர்கள் இப்புனித சின்னங்களை குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையில் கொண்டுசெல்லவுள்ளார்.

6. புனித சின்னங்களுக்கு குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் உரிய முறையில் வரவேற்பளிக்கப்படும். அத்துடன் இந்திய அரசாங்கத்தால் முழுமையான அரச கௌரவமும் வழங்கப்படும். மேலும் குஷிநகர் மற்றும் சாரநாத் உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் அவை காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

7. கபிலவஸ்து புனித சின்னங்களுக்கு புறம்பாக, 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட புனித பிப்ரஹ்வா சின்னங்கள் மாத்திரமே இலங்கையில் புத்தபெருமானின் வாழ்க்கைக்காலத்தை ஆவணப்படுத்தும் சின்னங்களாகும். அவை அதி வணக்கத்துக்குரிய வஸ்கடுவே ராஜகுரு ஶ்ரீ சுபுதி நாயக தேரர் அவர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் களுத்துறையில் உள்ள வஸ்கடுவ விகாரையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 2020 புத்த பூர்ணிமா தினத்தன்று தனது மெய்நிகர் உரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த விகாரை தொடர்பாக விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.

8. இந்த புனித சின்னங்கள் 2015 ஒக்டோபரில் இந்தியாவுக்கு கொண்டுசெல்லபட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள கபிலவஸ்து புனித சின்னங்கள் கடந்த காலத்தில் 6 தடவைகள் மாத்திரமே இந்தியாவுக்கு வெளியில் எடுத்துச்செல்லப்பட்டிருந்ததுடன் 1978 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9. குஷிநகருக்கான முதலாவது விமானசேவையும் புனித சின்னங்களின் கண்காட்சியும் இந்திய இலங்கை மக்களால் பகிரப்படும் பொதுவான அம்சங்களுக்கு சான்றுபகர்கின்றன.

No comments:

Post a Comment