இலங்கை இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

இலங்கை இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

(ஆர்.யசி)

முன்மாதிரி கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனவே கடந்த காலங்களில் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை கையாண்டு வருகின்றதைப்போலவே தொடர்ந்தும் இலங்கை இந்திய நட்புறவை பேணிப்பாதுகாக்க அரசாங்கமாக நடவடிக்கை எடுப்போம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் கூறுகின்றார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய வேலைத்திட்டங்களை அவதானிக்கவுள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகாரதுறை அமைச்சர், ஆளுந்தரப்பு முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவின் விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில், இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கைக்கு வருகை தந்துள்ளார், அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார். இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை பலப்படுத்தும் வேலைதிட்டங்களாக முன்மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன, இவற்றில் ஆயிரத்து எண்ணூறு வீடுகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக இலங்கை ரூபாவில் 900 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது.

அதேபோல் மெனிக் பார்ம் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களிலும் 25 வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் நான்காயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறான வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் எமக்கு செய்து கொடுக்கின்றமை மிகப்பெரிய பலமாகவே கருதுகின்றோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை கையாண்டு வருகின்றது. தொடர்ந்தும் நாம் நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். இலங்கையின் நகர்வுகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகவே நாம் கருதுகின்றோம்.

இந்த வேலைத்திட்டங்களை முன்னகர்த்தி கொண்டு செல்லும் செயற்பாடுகளில் உள்ளக ரீதியில் பிளவுகள் இல்லாது நாட்டின் நலனுக்காக சகல தரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவதுவே காலத்தின் தேவையாக உள்ளது எனவும் அவர் சுட்டுக்கட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இன்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் இரு தரப்பு நட்புறவு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment