(எம்.மனோசித்ரா)
வட மாகாணத்திற்கு தற்போது ஒரேயொரு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் மாத்திரமே காணப்படுகிறார். அவர் விடுமுறையில் செல்லும்போது அங்கு சேவை குறைபாடு ஏற்படும். எனவே இதற்கான இரண்டாவது நியமனம் வழங்கப்படுவதை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திட்டமிட்டு தடுக்கின்றார். இந்த நியமனம் விரைவில் வழங்கப்படா விட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் என்று அதன் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கடந்த காலங்களில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சீரான சுகாதார சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும். அந்த வகையில் வட மாகாணத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரமே பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கடமை புரிகின்றார்.
குறித்த வைத்திய நிபுணர் ஒரு வாரத்திற்கிடையில் விடுமுறையில் செல்வாராயின் அங்கு சேவை குறைபாடு காணப்படும். எனவே இங்கு இரு நியமனங்கள் வழங்கப்பட்டால் அங்குள்ள மக்களுக்கு தொடர்ச்சியான சேவை கிடைக்கப் பெறும்.
எனினும் இரண்டாவது நியமனத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தடையாகவுள்ளார். அவருடன் இணைந்து சுகாதார அமைச்சும் இந்த நியமனத்தை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு அறிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக நாம் அடுத்த கட்டமாக வட மாகாண ஆளுனருக்கு அறிவித்துள்ளோம்.
அடுத்த வாரம் இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுனருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இது குறித்து ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் வாரங்களிலேனும் வட மாகாணத்திற்கு இரண்டாவது சத்திர சிகிச்சை நிபுணருக்கான நியமனத்தை வழங்கா விட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் என்றார்.
No comments:
Post a Comment