ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அக்கரைப்பற்று பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக 6 கிலோ கிராம் கேரள கஞ்சா பரிமாற்றத்தில் ஈடுபட்ட பஸ் நடத்துநரும் கஞ்சா விற்பனை முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை 22.10.2021 காலை அக்கரைப்பற்று பதூர் நகர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கொழும்பு அக்கரைப்பற்று சேவையிலீடுபடும் தனியார் பஸ் ஒன்றின் மூலமாக இத்தகைய கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக அக்கரைப்பற்று பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருந்த பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை குறிப்பிடப்பட்ட பஸ் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்ததும் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
அப்போது பஸ் நடத்துநர் கொழும்பிலிருந்து கொண்டு வந்த கஞ்சா பார்சல்களை அக்கரைப்பற்றிலுள்ள கஞ்சா விற்பனை முகவரிடம் கையளித்தபோது கையும் மெய்யுமாகக் கஞ்சாப் பொதியைக் கைப்பற்றி சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான 30 வயதுடைய பஸ் நடத்துநரும் 21 வயதுடைய கஞ்சா விற்பனை முகவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது விடயமாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விஷேட புலனாய்வுப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும் கஞ்சா பொதிகளையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment