மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்க 5 இலட்சம் பனை மரங்களை நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு - News View

Breaking

Monday, October 18, 2021

மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்க 5 இலட்சம் பனை மரங்களை நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு 5 இலட்சம் பனை மரங்களை நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களை மையப்படுத்தி பனை மரம் நாட்டும் திட்டம ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்துடன் இணைந்து இச்செயற்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவாமிமலை இளங்கதிர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டிருந்தனர்.

எல்லைக் கிராமங்களை அழகுபடுத்துவதுடன் மண்ணரிப்பு அத்துமீறிய காட்டு யானைகளின் ஊடுருவலை தடுப்பதுடன் பனை சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் என்று அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே நோக்கத்திற்காக பனை விதைகளை மாவட்டம் முழுவதிற்கும் நடுகை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கான அனுமதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பனை அபிவிருத்தி அதிகார சபையிடமும் இருந்து பெற்றிருப்பதாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாவட்டத்தில் உள்ள ஏனைய எல்லைக்கிராமங்களிலும் இச்செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தமக்கு அனைத்து கிராமங்களிலும் உள்ள இளையோர் சமூகமும் இச்செயற்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தம்மோடு இணைந்து கை கோர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment