இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி 15 பந்துகளில் மீதமிருக்க 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நேற்றையதினம் (10) ஓமானின் அல் அமேரத் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் ஆகிப் இல்யாஸ் 59 (38) ஓட்டங்களையும், காஷ்யப் பிரஜபதி 22 (19) ஓட்டங்களையும், அயான் கான் 20 (26) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார மற்றும் சாமிக கருணாரத்ன தலா இரண்டு விக்கெட்டுகளையும் பினுர பெனாண்டோ, மஹீஷ் தீக்ஷண, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி, இரண்டு ஓட்டங்களுக்கு அடுத்தடுத்த இரு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையானது ஓமான் அணிக்கு சாதகமாக அமைந்த போதிலும், அதனை சரியாக பயன்படுத்தாத ஓமான் அணி வீரர்கள், ஓட்டங்களை வாரி வழங்கினர்.
No Ball பந்துகள், 6 ஓட்டங்கள் என வழங்கியதைத் தொடர்ந்து, பானுக ராஜபக்ஷ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் வெற்றிப் பாதையை இலங்கை அணிக்கு சார்பாக அமைத்துக் கொடுத்தனர்.
பானுக ராஜபக்ஷ, சாமிக கருணாரத்ன இணைந்து இணைப்பாட்டமாக 44 பந்துகளில் 74 ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 21 பந்துகளில் 35 ஓட்டங்களையும், சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காது 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 26 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெனாண்டோ 33 (18), பெத்தும் நிஸ்ஸங்க 26 (29) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஓமான் அணி சார்பில், மொஹமட் நதீம் இரண்டு விக்கெட்டுகளையும், கலிமுல்லாஹ், பயாஸ் பட், சீஷான் மக்சூத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் இரண்டு போட்டிகளை கொண்ட ரி20 தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி கொண்டுள்ளது.
No comments:
Post a Comment