'கோப்26' மாநாடு கிளாஸ்கோவில் நாளை ஆரம்பம் : இலங்கையில் நில அபகரிப்பு, காடழிப்புக்கு எதிராக ஸ்கொட்லாந்து பத்திரிகையில் விரிவான விளம்பரம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

'கோப்26' மாநாடு கிளாஸ்கோவில் நாளை ஆரம்பம் : இலங்கையில் நில அபகரிப்பு, காடழிப்புக்கு எதிராக ஸ்கொட்லாந்து பத்திரிகையில் விரிவான விளம்பரம்

(நா.தனுஜா)

'கோப் 26' கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து பயணமாகவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர்களின் நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு என்பவற்றுக்கு எதிராக 'த நஷெனல்' என்ற ஸ்கொட்லாந்து பத்திரிகையில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'எங்கள் நிலம்' என்ற பிரசாரத்தின் ஓரங்கமாகவே 'காடழிப்பைக் கையாளுதல் என்பது கோப் 26 இன் முக்கிய சவால்களில் ஒன்றாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில், காடழிப்பு என்பது வெறுமனே ஒரு தவறல்ல' என்ற தலைப்பிலான மேற்படி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு (கோப் 26) நாளையதினம் (31 ஆம் திகதி) ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இவ்வார இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்திற்குப் பயணமாகவிருப்பதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க கடந்த வாரம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்கொட்லாந்தில் வெளியாகும் 'த நஷெனல்' என்ற பத்திரிகையில், இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பான விளம்பரமொன்று வெளியாகியுள்ளது.

பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஆதரவுடன் ஸ்கொட்லாந்து வாழ் இலங்கைத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'எங்கள் நிலம்' என்ற பிரசாரத்தின் ஓரங்கமாகவே மேற்படி விளம்பரம் வெளியாகியுள்ளது.

அதில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் 'கிவிலு ஓயா அபிவிருத்தி செயற்திட்டத்தின்' கீழ் தெற்கிலுள்ள சிங்களவர்களைக் குடியமர்த்தும் நோக்கில் வடக்கின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான ஒக்லாந்து கற்கைகள் நிலையத்தின் ஆய்வின் மூலமான தகவல்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

'காடழிப்பைக் கையாளுதல் என்பது கோப் 26 இன் முக்கிய சவால்களில் ஒன்றாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில், காடழிப்பு என்பது வெறுமனே ஒரு தவறல்ல' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், காடழிப்பிற்காக தமிழர் தாயகப்பகுதிகள் இலக்கு வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மேலும் பல பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடந்த சில ஆண்டுகளில் சுமார் 2000 சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் 'எங்கள் நிலம்' பிரசாரத்தின் ஓரங்கமாக வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 3000 இற்கும் அதிகமான சிங்களவர்களை இப்பகுதிகளில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவற்ற யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களின் காணிகளையும் வாழ்க்கையையும் அடையாளத்தையும் சிதைத்து விட்டதாகவும் அவ்விளம்பரத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர்கள், 'தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும்' என்றும் வலியுறுத்தியுள்ளது.

'கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள கோப் 26 மாநாட்டில், இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பிலிருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாப்போம்' என்றும் அவ்விளம்பரத்தின் ஊடாக 'எங்கள் நிலம்' பிரசாரத்தை முன்னெடுத்து வரும் புலம்பெயர் தமிழர்கள் அறைகூவல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment