(எம்.மனோசித்ரா)
ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தில் 2017 ஆம் ஆண்டு இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாகக் காணப்பட்டது.
தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது.
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 27 சர்வதேச கடைபிடிப்புக்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சூழல், காலநிலை மற்றும் நல்லாட்சி கொள்கைகள் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. இலங்கையில் இந்த தூதுக்குழு தங்கியிருந்த 10 நாட்கள் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
மேலும் எதிர்க்கட்சியினர், சிவில் சமூக அமைப்புக்களான மனித உரிமை காப்புச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களின் பிரதான அதிகாரிகளுடனும் இந்த குழு சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தது.
மனித உரிமைகள், சட்ட விதிமுறைகள், பொருளாதாரம், சமூக - கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கண்காணிப்பு குழு கவனம் செலுத்தியிருந்தது.
2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்பி. பிளஸ் திட்டத்தில் இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாகக் காணப்பட்டது.
தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் இக்குழு அவதானம் செலுத்தியிருந்தது.
இலங்கையிலுள்ள சகல சமூகங்களினதும் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடு இன்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்பு திருத்தம் என்பன குறித்து அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டது.
போதைப் பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடி பற்றியும் ஆராயப்பட்டிருந்தது.
ஜீ.எஸ்.பி. பிளஸ் பயன்பாடு மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் என்பது இலங்கையிலுள்ள ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் மாநாட்டின் தலைப்பாகக் காணப்பட்டது.
இந்த விஜயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச அர்ப்பணிப்புக்களின் வினைத்திறன் வாய்ந்த நடைமுறை என்பதன் ஊடாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை முன்னுரிமைச் சலுகை அடிப்படையில் அணுகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது.
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவதுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். கண்காணிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபாட்டை பேணுவது என்பது, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சம்மேளனத்தின் அமைச்சர்களுக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக அமைந்திருக்கும் என்றார்.
No comments:
Post a Comment