இலங்கையில் 18 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் 21 முதல் தடுப்பூசி, பாடசாலைகளிலேயே ஏற்ற நடவடிக்கை : 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள் 10,000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

இலங்கையில் 18 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் 21 முதல் தடுப்பூசி, பாடசாலைகளிலேயே ஏற்ற நடவடிக்கை : 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள் 10,000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

18 - 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

இன்று (08) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்துப் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டமானது, வைத்தியர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மேற்படி வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும்.

இதுவரையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் 100 சதவீதமளவிலும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல், 98 சதவீதமளவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, இக்கூட்டத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது. 

20 - 30 வயதுக்கு இடைப்பட்டோரில், இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

12 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் சிகிச்சையகங்களின் (கிலினிக்) ஊடாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தற்போது நாட்டில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வரையில் நீடிக்கவும், கொவிட் ஒழிப்புச் செயலணி தீர்மானித்தது. தடுப்பூசி ஏற்றலை வெற்றிகரமானதாக்க ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment