மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் 12 மணி நேர மின் துண்டிப்பு ஏற்படுவது நிச்சயம் - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை - News View

Breaking

Wednesday, October 20, 2021

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் 12 மணி நேர மின் துண்டிப்பு ஏற்படுவது நிச்சயம் - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு மற்றும் மசகு எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. இந்த நிலைமையை உணர்ந்து கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எதிர்வரும் காலங்களில் முகம்கொடுக்க வேண்டிவரும் சவால்கள் தொடர்பாக நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் பெற்றோலிய அமைச்சராக இருந்த நான் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீது ராஜபகஷவினர் விதித்திருந்த வரிகளை இல்லாமலாக்கி நிவாரணம் பெற்றுக் கொடுத்தேன். அதேபோன்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை டொலர் பற்றக்குறைக்கு ஆக்கவில்லை.

இலங்கை மின்சார சபையின் மின் கட்டணங்களை குறைத்தோம். எரிபொருள் சரி செய்தல் கட்டணத்தை நீக்கி இலங்கை மின்சார சபையை லாபமீட்டிக்காட்டினோம். ஆனால் இப்போது இருப்பது, முகாமைத்துவம் மற்றும் நிர்வகிப்பதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையாகும்.

அத்துடன் பெற்றோலிய விலை அதிகரித்திருக்கின்றதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். என்றாலும் நாங்கள் விற்பனை செய்வதைவிட குறைவாகவே பெற்றோல் துறைமுகத்துக்கு வருகின்றது. அதனை யாருக்கு வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்க்கலாம்.

மேலும் இலங்கை வரலாற்றில் 1977 திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை மத்திய வங்கியில் நிகர வெளிநாட்டு சொத்துக்களின் அளவு சூனியமாகி இருப்பது வரலாற்றில் முதல் தடவையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று இலங்கையின் அனைத்து வங்கி கட்டமைப்பினதும் வெளிநாட்டு சொத்துக்களின் அளவு மரை 3.5 பில்லியன் டொலராகும்.

அதனால் இன்று டொலர் இல்லை. அதனால் இலங்கை வங்கிகளால் வெளியிடப்படும் கடன் கொடுப்பனவு ஆவணம் தொடர்பிலான நம்பகத்தன்மை முற்றாக இல்லாமல் போயிருக்கின்றது. அதனால் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு மசகு எண்ணெய் கொண்டுவருவதற்கு விடுக்கப்பட்ட 5 கேள்விக் கோரல்களுக்கும் எந்தவொரு விநியோகத்தரும் முன்வரவில்லை. அதனால் மசகு எண்ணெய் விநியோகித்து எதிர்வரும் டிசம்பம் மாதமாகும்போது எமது சுத்திரகரிப்பு நிலையங்களை மூடிவிட வேண்டிவரும்.

சுத்திரகரிப்பு நிலையங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டால், சுத்திகரிப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் தயாரித்த பின்னர் மீதமாகும் எண்ணெய் மற்றும் வேறு மசகு எண்ணெய்களின் மூலமே எமது மின்சாரசபையின் அதிகமான மின் நிலையங்கள் செயற்படுகின்றன.

அதேபோன்று மின் விநியோகத்தில் 45 வீதம் விநியோகிகப்படுவது புத்தளம் நிலக்கரி நிலையத்தினாலாகும். ஆனால் நிலக்கரி கேள்விக்கோரலுக்கு எந்தவொரு விநியோகத்தரும் வரவில்லை. வெளிநாட்டு வங்கிகள் இலங்கையில் வங்கிகளில் எல்.சி. திறக்க முடியாது.

அதனால் நிலக்கரி கொண்டுவராவிட்டால் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு பின்னர் நாட்டில் மின் விநியோகத்தில் குறைந்தது 45 வீதம் இல்லாமல்போகும். அதனால் குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி வரும். அதனால் அரசாங்கம் இந்த நிலைமையை உணர்ந்துகொண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment