வவுனியா மாவட்டத்தில் 114 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை - மேலதிக அரசாங்க அதிபர் - News View

Breaking

Friday, October 1, 2021

வவுனியா மாவட்டத்தில் 114 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை - மேலதிக அரசாங்க அதிபர்

வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 114 பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தொடர்பான கலந்துரையாடலின் பின் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க அதிபர் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சுகாதாரப் பிரிவினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இன்றைய தினம் நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எமது மாவட்டத்தில் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம். இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் வவுனியா மாவட்டம் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72 வீதமானவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். 29-59 வயதிற்குட்பட்ட 58 வீதமானவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். 18-29 வயதிற்குட்பட்ட 28 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 7,175 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். அதில் இதுவரை 200 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்த 60 வயதிற்கு மேற்பட்ட இறப்புக்களில் 59.5 வீதமானவர்கள் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெறாதவர்களாக காணப்படுகின்றனர். 2 வீதமானவர்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நிலையில் மரணித்துள்ளார்கள். தடுப்பூசியைப் பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்ககும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எமது மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் காணப்படுகின்றன. அதனை திறப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுன்ளது. இந்த வேலைகளை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரின் உதவிகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment