100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பாராட்டு தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் - News View

Breaking

Thursday, October 21, 2021

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பாராட்டு தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை இன்று (21) 100 கோடியை கடந்துள்ளது.  இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம். ஜப்பானை விட 5 மடங்கு, ஜெர்மனியை விட 9 மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. 

நாட்டு மக்கள் விரைவாக தடுப்பூசி போடும் வகையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு தடுப்பூசி மெகா முகாம்களும் நடத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்று மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா இன்று 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டில் தடுப்பூசி போட தொடங்கிய 9 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பெருமையுடன் டுவிட்டரில் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா வரலாறு படைத்துள்ளது. 130 கோடி இந்தியர்களின் அறிவியலின் மாண்பை, கூட்டு முயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியை காண்கிறோம், 100 கோடி தடுப்பூசிகளைக் கடந்த இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள அவர், 'கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி இலக்குகளை எட்ட முயற்சி செய்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment