கற்பித்தலை ஆரம்பிக்க கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் - News View

Breaking

Thursday, October 21, 2021

கற்பித்தலை ஆரம்பிக்க கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

பேராயர் கர்தினால் மெர்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலின் கீழ் மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு அமைய பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் எந்தவொரு தினத்திலும் கற்பித்தலை ஆரம்பிக்க தயாராகவுள்ளதாக கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய கத்தோலிக்க கல்வி பணிப்பாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்திற்கு இணங்கி செயற்படுமாறு சகல கத்தோலிக்க அதிபர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

கத்தோலிக்க கல்வியின் கீழ் கற்கின்ற சகல மாணவர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதை கத்தோலிக்க சபை ஸ்திரமாக நம்புகிறது. மாணவர்களின் கல்வியை புறந்தள்ளி முன்னெடுக்கும் எந்தவொரு போராட்டத்திலும் எம்மால் வெற்றியடை முடியாது.

அதற்கமைய இந்த தீர்க்கமான காலகட்டத்தில் சகல கத்தோலிக்க அதிபர் , ஆசிரியர்களை கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் தமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை நிறுத்துவது இந்த தீர்மானத்தின் நோக்கம் அல்ல.

சகல கத்தோலிக்க சபைகளும் அவற்றின் தலைமைத்துவமும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க ஒத்துழைப்புக்களை வழங்கும்.

No comments:

Post a Comment