தமிழினத்தை காப்பாற்ற நினைப்பவன் கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டான் - பியசேன - News View

Breaking

Friday, September 10, 2021

தமிழினத்தை காப்பாற்ற நினைப்பவன் கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டான் - பியசேன

பொதுஜன பெரமுனவின் பலம் வடகிழக்கு மலையகத்தில் கடந்த தேர்தலின்போது முழுமையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என, அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பொ. பியசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அரசியல் போக்குத் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுன வடக்கு, கிழக்கு, மலையகம் என இலங்கை முழுவதில் ஆட்சியைப் பலப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது வட கிழக்கு மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் தமிழ் மக்களிடையே ஒரு குழப்ப நிலை உருவாகியுள்ளது. 

சிங்களக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் பெருவாரியாக முறையே தத்தமது இன மக்களிடம் இருந்து ஆதரவைப் பெற, தமிழ் மக்கள் பிரிவினைகளின் நிமித்தம் இருப்பை விட்டு விடுவார்களோ என்று தமிழ்க் கட்சிகள் அச்சப்படுகின்றன.

கூட்டமைப்பு, 2013 ஆம் ஆண்டில் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக நடந்து கொள்ள முன்வரவில்லை என்பது வரலாற்றுத்தவறாக பார்க்கப்படுகிறது. 

கூட்டமைப்பு 2010, தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு கூறியது ஒன்று, செயல்பாடுகள் இன்னொன்றாக இருந்தது. கூட்டமைப்பினர் மக்கள் நலனை கருத்திற்கொண்டு ஒரு போதும் செயற்படவில்லை என்பதே உண்மையாகும்.

தமிழ் மக்களைப் பாதிக்கும் பல விடயங்கள் தீர்க்கப்படாமல் தொக்கி நிற்கின்றன. அவற்றை வேண்டுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்த்து வைக்கட்டும். 

ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, அரசியல் கோரிக்கைகள், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டி நிவாரணங்களைப் பெறுவது உட்பட பல்வேறு தேவைகளை கூட்டமைப்பினால் பெற்றுக்கொடுக்கவே முடியாது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எப்பொழுதும் தமிழ் மக்களின் தேர்தல் கால வாக்குகளே தேவையே தவிர வேற ஒன்றுமில்லை என்பது யாவருக்கும் தெரிந்ததே.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற எந்த நோக்கும் இன்றியே கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள். தமிழினத்தைக் காப்பாற்ற நினைப்பவன் கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டான் என்பதே நிதர்சன உண்மையாகும் என்றார்.

மண்டூர்  நிருபர்

No comments:

Post a Comment