ஒரு வார காலமாவது அறிவியல் பூர்வமாக நாட்டை முடக்கியிருந்தால் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்க முடியும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Friday, September 10, 2021

ஒரு வார காலமாவது அறிவியல் பூர்வமாக நாட்டை முடக்கியிருந்தால் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்க முடியும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை முழுமையாக முடக்காமல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவது பயனற்றது. ஒரு வார காலமாவது அறிவியல் பூர்வமாக நாட்டை முடக்கியிருந்தால் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்க முடியும்.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால் கொவிட் தொற்று குறைவடையவில்லை. மாறாக நடுத்தர மக்களே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

வைரஸ் போன்ற அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தப்படும் போது மக்கள் வீதியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படும். அத்துடன் ஒருவருக்கொருவரான தொடர்பு தடை செய்யப்படும்.

அத்துடன் நாட்டை முழுமையாக முடக்கி கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான வழிமுறைகளுக்கு அமையவே பெரும்பாலான நாடுகள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தி சாதகமான பயனை பெற்றுக் கொண்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment