முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : சி.ஐ.டி யினருக்கு கால அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : சி.ஐ.டி யினருக்கு கால அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்த சாட்சியங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

அசாத் சாலி விவகார வழக்கு விசாரணைகள், இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போது அசாத் சாலி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜராகியுள்ளார்.

சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளின் தொகுப்பு மன்றில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அசாத் சாலிக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மன்றில் பிரசன்னமாகியுள்ள சி.ஐ.டி. அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவும், அத்திணைக்களத்தின் உதவியை பெறவும் கால அவகசம் வேண்டும் என கோரியுள்ளனர்.

அதன்படி அதற்கான கால அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் 16 ஆம் திகதி, அசாத் சாலி கொள்ளுபிட்டி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அசாத் சாலியை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மார்ச் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த தடுப்புக் காவல் அனுமதி ஜனாதிபதியினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி கைது செய்யப்பட்டு, பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் இந்த 90 நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்த சந்தேக நபருக்கு உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிப்பதாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 19 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு அவரை தடுத்து வைக்க அனுமதிப்பதாக ஜனாதிபதி குறித்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலி, கடந்த மே 18 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக சி.ஐ.டி.யினரால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போதே அவருக்கு இருதய கோளாறுக்கான சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி, வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட கொழும்பு பிரதான நீதிவான், தடுப்புக் காவல் விசாரணை நிறைவுற்றுள்ளதை கருத்தில் கொண்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment