இரு மது விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் புதிய அனுமதிப் பத்திரம் கொடுங்கள் - மேன் முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

இரு மது விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் புதிய அனுமதிப் பத்திரம் கொடுங்கள் - மேன் முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரதேச மது வரி அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பழிவாங்கல் காரணமாக, தமது மது விற்பனை நிலைய அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்படாமை தொடர்பில், மது விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் தாக்கல் செய்த எழுத்தணை கோரும் மனுக்களை (ரிட் மனுக்கள்) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அவர்களுக்கு புதிய மது வரி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு, மது வரி ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்தாணை பிறப்பித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித்த ராஜகருணாவின் இணக்கப்பாட்டுடன், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல இந்த தீர்ப்பை இன்று அறிவித்தார்.

களனி பகுதியை சேர்ந்த கே.டி.டி. சில்வா மற்றும் கே.டி. பிரியதர்ஷன ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணை செய்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மனுதாரர்கள் பல பிரதேசங்களில் மது விற்பனை நிலையங்களை நடாத்தி வரும் வர்த்தகர்களாவர்.

மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்காமை தொடர்பிலேயே மனுதாரர்கள் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குமாறு எழுத்தாணை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இதற்கு முன்னர் மதுவரி திணைக்களத்தின் பிரதேச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் இடையூறுகளுக்கு முகம் கொடுத்துள்ளதால், அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்காமை தொடர்பில் மனுதாரர்கள் நீதிமன்றை நாடியுள்ளனர்.

மனுதாரர் கடந்த 2001 ஆம் ஆண்டு அரசாங்கம் மாறிய பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்திடம் தமது அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்குமாறு கோரியுள்ளனர். எனினும் அது நடக்கவில்லை.

பின்னர் மனுதாரர்கள் தமது கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன் வைத்துள்ளனர். முறைப்பாடாக முன் வைக்கப்பட்டுள்ள குறித்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மது வரி திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் அது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவ்வறிக்கை பிரகாரம், 5 வருடங்கள் கடந்து விட்டதால் மதுவரி கட்டளைகள் மற்றும் கொள்கைகளுக்கு அமைய மதுவரி அனுமதிப் பத்திரம் வழங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் இந்த மதுவரி கட்டளைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் தேடிய போதும் அது தொடர்பில் அறிய முடியவில்லை என மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

முன் வைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இதற்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள , எடுத்துக் காட்டு வழக்கான விஜேசேகர வழக்கினையும் ஆராயும் போது, மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கடமை தவறியுள்ளதாக இந் நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

அதனால் மனுதாரர்களுக்கு குறித்த அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு மதுவரி ஆணையாளர் நயகத்துக்கு இந்த மன்றம் எழுத்தாணை பிறப்பிக்கின்றது.' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருக்ஷான் சேனாதீரவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன ஆஜரானார்.

பிரதிவாதிகளுக்காக சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி பேராசிரியர் சாருக ஏக்கநாயக்க ஆஜரானார்.

No comments:

Post a Comment