(எம்.ஆர்.எம்.வசீம்)
அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் அதற்கு சந்தையில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை குறைப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்கும் என நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் இணையவழி தொழிநுட்பத்தினூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின்போது குறிப்பிடுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதா என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலின்போது, பால்மா, சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பது மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்துக்கு சமர்ப்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமெந்தி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையை பேணுவதா? அல்லது அதிகரிப்பதா, என்பதை அமைச்சரவையிலேயே தீர்மானிக்கப்படும். அதுவரைக்கும் பால்மா, சமையல் எரிவாயு உட்பட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு இடம்பெறாது என்றார்.
No comments:
Post a Comment