டெல்டா பரவல் அச்சுறுத்தல் குறையவில்லை, மீண்டும் வேகமாக பரவக்கூடிய நிலை - சந்திம ஜீவந்தர - News View

Breaking

Sunday, September 12, 2021

டெல்டா பரவல் அச்சுறுத்தல் குறையவில்லை, மீண்டும் வேகமாக பரவக்கூடிய நிலை - சந்திம ஜீவந்தர

(ஆர்.யசி)

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நிலையொன்று காணப்படுகின்ற போதிலும் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை குறையவில்லை எனவும், தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாகவும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர ஆகியோரின் ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது, இந்நிலையில் வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், டெல்டா வைரஸ் நாட்டில் வேகமாக பரவிக் கொண்டுள்ளது, இறுதியாக நாம் முன்வைத்த ஆய்வறிக்கையில் கூட தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தோம்.

ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அன்று தொடக்கம் நாளாந்தம் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாடு மீண்டும் நீண்ட முடக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் நிலைமைகளை கட்டுப்படுத்த இது சாதகாமகவே உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் குறித்த ஒரு மாத காலத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காகவோ அல்லது கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவை காட்டுகின்றது என்பதற்காகவோ நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளதென கருதுவது தவறானதாகும். இன்னமும் நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையே காணப்படுகின்றது.

அதேபோல் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கும் வரையில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையே இருக்கும்.

டெல்டா வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ள காரணத்தினால் நாம் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவது சவாலான விடயமே.

எனவே மக்கள் இப்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது மற்றும் அயலவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad