பம்பலப்பிட்டியில் இரு பாதுகாவலர்கள் மீது தாக்குதல் : அம்பாந்தோட்டை நகர பிதாவை கைது செய்ய நடவடிக்கை ! - News View

Breaking

Wednesday, September 15, 2021

பம்பலப்பிட்டியில் இரு பாதுகாவலர்கள் மீது தாக்குதல் : அம்பாந்தோட்டை நகர பிதாவை கைது செய்ய நடவடிக்கை !

(எம்.எப்.எம்.பஸீர்)

பம்பலபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கொத்தலாவல எவனியூ பிரதேசத்தில் அமைந்துள்ள இடமொன்றுக்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த இரு பாதுகாவலர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அம்பாந்தோட்டை நகர பிதா எராஜ் பெர்ணான்டோவை கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அம்பாந்தோட்டை நகர பிதாவின் தாக்குதலுக்கு உள்ளான இரு பாதுகாவலர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பம்பலபிட்டிய் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று (14) இரவு வேளையில், தனது காரில், குறித்த பகுதிக்கு எராஜ் பெர்ணான்டோ தனியாக சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த காரணத்தையும் கூறாது தன்னையும், தன்னுடன் இருந்த மற்றைய பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியதாக, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் ஒருவர் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று முற்பகல் செய்துள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலாகும் போது இந்த சம்பவம் தொடர்பில் நால்வரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய பம்பலபிட்டி பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ய மேலதிக விசாரணிகளை முன்னெடுப்பதாக கூறினர்.

பம்பலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனில் ஜயந்தவின் கீழ் சிறப்புக் குழு இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment