ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு கூட்டணி என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே அனைத்து சவால்களையும் வெற்றிக் கொண்டு முன்னேற்றமடைய முடியும் என்றே பிரதமர் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் பங்காளி கட்சியினருக்கு கிடையாது என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியின் ஊடாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்கள் தொடர்பில் பங்காளி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம்.
கெரவலப்பிடிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்வது அவசியமாகும். இதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் என பிரதமர் பங்காளி கட்சியின் தலைவர்களிடம் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தையின் ஊடாக மாத்திரம் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். அதனை விடுத்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதை அனைத்து தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment