'சுஜீவா' வையும் அதன் குட்டியையும் கையளிப்பதில் இழுபறி : வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

'சுஜீவா' வையும் அதன் குட்டியையும் கையளிப்பதில் இழுபறி : வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி

(எம்.எப்.எம்.பஸீர்)

மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில், தற்போதும் வன ஜீவிகள் திணைக்கள பொறுப்பிலுள்ள 'சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் விடுவிப்பது தொடர்பில், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கும் வரையில், தான் எந்த உத்தரவுகளையும் வழங்கப் போவதில்லை என கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.

குறித்த யானையையும், அதன் குட்டியையும் இந்த விவகாரத்தில் யானையை சி.ஐ.டி. கையேற்கும் போது உரிமை கொண்டாடியவருக்கே விடுவிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையையும், குறித்த யானைக்கு உரிமை கொண்டாடும் தரப்பின் சார்பிலான கோரிக்கையையும் ஆராய்ந்த போதே கொழும்பு பிரதான நீதிவான் இதனை அறிவித்தார்.

நேற்று இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, விசாரணைக்கு வந்தது. இதன்போது விசாரணை அதிகாரிகளுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க மன்றில் ஆஜரானர்.

சுஜீவா யானையின் உரிமையாளர் தரப்பில் சட்டத்தரணி அனில் மத்துமகேயுடன் சட்டத்தரணி அசங்க ஆஜரானார்.

இதனைவிட, விலங்குகளின் நலன் மற்றும் இயற்கை நீதி தொடர்பிலான அமைப்புக்களை மையப்படுத்தியும், இரு சட்டத்தரணிகள் சார்பிலும், இடையீட்டு தரப்பினராக தம்மை அறிமுகம் செய்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான திலுனி டி அல்விஸ், ரவீந்ரனாத் தாபரே, ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட ஆகியோர் ஆஜராகினர்.

இதனையடுத்து மன்றில் விடயங்களை முன் வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதிவானினால் இரு முறை உறுதி செய்யப்பட்ட உத்தரவின் பிரகாரம், 14 யானைகள் அவை கைப்பற்றப்படும் போது உரிமை கொண்டாடியவர்களிடமே கையளிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.

எனினும் நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்ட யானைகளில் உள்ளடங்கும் 206 ஆம் இலக்க யானையை (சுஜீவா) விடுவிப்பது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. காரணம் அந்த யானை குட்டி ஒன்றினை ஈன்றுள்ளதால் அந்த சிக்கல் ஏற்பட்டது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளை சட்ட விதி விதானங்கள் பிரகாரம் 5 வயதுக்கு குறைந்த யானைக் குட்டி ஒன்று அதன் தாயுடனேயே இருக்க வேண்டும். எனவே ஏற்கனவே தாயை உரிமையாளரிடம் கையளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், யானைக் குட்டியையும் அவரிடமே கையளிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து சுஜீவா யானையின் உரிமையாளர் என கூறப்படும் சுனத் வீரசிங்க சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அசங்க வாதங்களை முன் வைத்து, சட்டமா அதிபரின் கோரிக்கையும் தமது கோரிக்கையும் ஒரே சமாந்தரமானது எனவும் தாய் யானையுடன் குட்டியையும் தங்களிடம் கையளிக்கும் வகையில் உத்தரவிடுமாறு கோரினார்.

இந்நிலையில், விலங்குகளின் நலன்குறித்த ஆர்வலர்கள், அமைப்புக்கள் சார்பில் மன்றில் விடயங்களை முன் வைக்க சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இல்லை எனவும், அதற்கு அனுமதிக்க கூடாது எனவும் சட்டமா அதிபர் தரப்பும், யானை உரிமையாளர் தரப்பும் வாதிட்டன.

எனினும் விலங்குகளின் நலன் குறித்த ஆர்வலர்கள், அமைப்புக்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தமக்கு ஆஜராக சட்ட ரீதியாக உரிமை இருப்பதாக வாதிட்டனர்.

அத்துடன் 'சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் எந்த தரப்புக்கும் விடுவிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் தமது ரிட் மனுக்களை ஆராய்ந்து உத்தரவிட்டுள்ளமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், நீதிவான் நீதிமன்ற வழக்குகளில் தலையீடு செய்ய குறித்த விலங்குகளின் நலன்குறித்த ஆர்வலர்கள், அமைப்புக்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்து மன்றில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்க உத்தரவிட்ட பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, 206 ஆம் இலக்க யானை மற்றும் அதன் குட்டி தொடர்பிலும் உத்தர்வொன்றினை பிறப்பித்தார்.

தற்போது 'சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் எந்த தரப்புக்கும் விடுவிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவ்வாறு இருக்கையில், மேன் முறையீட்டு நீதிமன்றின் அவதானிப்பில் உள்ள ஒரு விடயம் தொடர்பில், அவ்வவதானிப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுகள் அமைவது, மேன் முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக் கூத்தாக கருதுவதாக அமையும்.

எனவே மேன் முறையீட்டு நீதிமன்றம் இவ்விடயத்தில் நிலைப்பாடொன்றுக்கு வரும் வரையில், முன் வைக்கப்ப்ட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பில் நான் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது.' என அறிவித்து வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment