இறக்குமதிக்கான உத்தரவாதத் தொகை விவகாரம் : அரசாங்கத்தின் முட்டாள்த்தனம் என்கிறது ஜே.வி.பி - News View

Breaking

Friday, September 10, 2021

இறக்குமதிக்கான உத்தரவாதத் தொகை விவகாரம் : அரசாங்கத்தின் முட்டாள்த்தனம் என்கிறது ஜே.வி.பி

(நா.தனுஜா)

அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதிக்கான உத்தரவாதத் தொகையை மத்திய வங்கி அதிகரித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் கல்விச் செயற்பாடுகள், பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேற்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவையும் உள்ளடக்கப்பட்டிருப்பது முட்டாள்த்தனமான விடயமாகும் என்று முக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால ரீதியில் தீர்வு காண்பதை விடுத்து, முறையற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குறுங்கால நோக்கிலான தற்காலிக நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அதன் பாதக தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் பொதுமக்களே இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அந்நியச் செலாவணியை சாதகமான மட்டத்தில் பேணல் மற்றும் அநாவசியமான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி உத்தரவாதத் தொகையை அதிகரிப்பதாக மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது.

இவ்வறிப்பின்படி மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள 623 பொருட்களை இறக்குமதி செய்யும்போது ஆரம்பத்திலேயே அதற்கான முழுத் தொகையையும் பணமாகச் செலுத்த வேண்டும். அதன் விளைவாகப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவில் வீழ்ச்சியேற்படும்.

அதேவேளை மேற்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் கையடக்கத் தொலைபேசி போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் கல்விச் செயற்பாடுகள், பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கையடக்கத் தொலைபேசி என்பது அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி அந்தப் பட்டியலில் உள்ளாடையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வரும் அரசாங்கத்திற்கு அது தேவையற்ற பொருளாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு அது அத்தியாவசியமான பொருளாகும்.

எனவே அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால ரீதியில் தீர்வு காண்பதை விடுத்து, முறையற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குறுங்கால நோக்கிலான தற்காலிக நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அதன் பாதக தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் பொதுமக்களே இருக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இப்போது அதன் செயற்பாடுகளால் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள். எனவே இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுமின்றி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை பொதுமக்களிடமிருந்தும் அந்தக் கோரிக்கை வலுப்பெற வேண்டியது அவசியமாகும். தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது மேலும் அழுத்தங்களை ஏற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு அனைவருக்கும் சமத்துவமான பொருளாதாரத்தையும் நேர்மையான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தாமல் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad