கடந்த 10 நாட்களில் நடந்த மனதிற்கு வேதனையளிக்கக் கூடிய சம்பவங்களின் விளைவாக பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் - News View

Breaking

Friday, September 10, 2021

கடந்த 10 நாட்களில் நடந்த மனதிற்கு வேதனையளிக்கக் கூடிய சம்பவங்களின் விளைவாக பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன்

(நா.தனுஜா)

அடுத்த மாதம் எனது 80 ஆவது வயதுப் பூர்த்தியுடன் ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்திருந்த போதிலும், கடந்த 10 நாட்களில் நடந்த மனதிற்கு வேதனையளிக்கக் கூடிய சம்பவங்களின் விளைவாக எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை எனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் அறிவித்திருக்கின்றார்.

மேலும் அதிக ஊதியம் மற்றும் ஏனைய பல்வேறு சலுகைகளுடன் எதிர்வரும் வருடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியாகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தனது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி அந்தப் பதவியை நிராகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தனது பதவி விலகலை அறிவிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நான் அடுத்த மாதம் எனது 80 ஆவது வயதுப் பூர்த்தியுடன் ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்திருந்தேன். இருப்பினும் கடந்த 10 நாட்ககளில் நடந்த மனதிற்கு வேதனையளிக்கக் கூடிய சம்பவங்களின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை எனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன்.

இலங்கையின் மிகவும் உயர் கௌரவத்திற்குரிய பதவியை வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றுவதற்காக இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றேன். இருப்பினும் எமது கட்டுப்பாட்டையும் மீறிய அக மற்றும் புறக்காரணிகளின் தாக்கத்தின் விளைவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் எம்மால் எதிர்பார்த்த பெறுபேறைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நான் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் சுமார் 3 மாதங்களில் நாடு கொவிட்-19 வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அதற்கு மத்தியில் உள ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான பல சவால்களும் காணப்பட்டன. அவ்வாறிருப்பினும் எதிர்பார்த்த பெறுபேறை அடைந்து கொள்வதற்காகக் கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டேன்.

எனவே உள ரீதியான அழுத்தங்களுக்கு இடையில் மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து தற்போது விலக நேர்ந்திருப்பதை நானும் எனக்கு மிக நெருக்கமானவர்களும் ஓர் அதிஷ்டமாகவே கருதுகின்றோம்.

மேலும் அதிக ஊதியம் மற்றும் ஏனைய பல்வேறு சலுகைகளுடன் எதிர்வரும் வருடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியாகப் பதவியேற்றுக் கொள்ளுமாறும் அதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகுமாறும் என்னிடம் கோரப்பட்டமையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

நான் சர்வதேச நாணய நிதியத்தில் பதவியொன்றைப் பொறுப்பேற்கவிருப்பதாகக் கடந்த வாரங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அவை மேற்படி கோரிக்கையை மையப்படுத்தியே வெளியிடப்பட்டிருக்கக்கூடும் என்று நான் அனுமானிக்கின்றேன்.

இதற்கு முன்னரும் மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தில் பதவி வகித்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. அது மிகவும் விரும்பப்படக் கூடிய பதவி என்றாலும், எனது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தப் பதவியை நிராகரித்திருக்கின்றேன்.

எனவே இப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் எனது உடல் நலத்தில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான ஓய்வு காலம் கிடைக்கும் என்று நம்புகின்றேன், எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment